முகப்பு
இந்தியா

இந்தியாவில் முஸ்லிம்களுக்கு சோதனைக் காலம்: மீர்வைஸ் உமர் ஃபரூக்

நாட்டில் உள்ள முஸ்லிம்கள் தற்போது சோதனையான காலத்தை சந்தித்து வருவதாக பிரிவினைவாதத் தலைவரும், காஷ்மீரைச் சேர்ந்த மதகுருவுமான மீர்வைஸ் உமர் ஃபரூக் கருத்து தெரிவித்துள்ளார்.

Updated On : 17 பிப்ரவரி, 2026 at 5:55 AM
- Center-Center-Bangalore
பகிர்:
Updated On : 17 பிப்ரவரி, 2026 at 5:53 AM

ஸ்ரீநகர் : நாட்டில் உள்ள முஸ்லிம்கள் தற்போது சோதனையான காலத்தை சந்தித்து வருவதாக பிரிவினைவாதத் தலைவரும், காஷ்மீரைச் சேர்ந்த மதகுருவுமான மீர்வைஸ் உமர் ஃபரூக் கருத்து தெரிவித்துள்ளார்.

காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மதம் சார்ந்த மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின் மீர்வைஸ் உமர் ஃபரூக், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மசூதிகள் மீது புல்டோசர்களை விட்டு தாக்கும் செயல்கள் நடைபெற்று வருகின்றன. முஸ்லிம்களின் சொத்துகள் சூறையாடப்படுவதுடன் முஸ்லிம்கள் மீது தாக்குதல்களும் நடக்கின்றன.

Advertisement

நாட்டில் உள்ள முஸ்லிம்கள் தற்போது சோதனையான காலத்தை சந்தித்து வருகின்றனர். மக்களை மதரீதியில் பிளவுபடுத்தும் செயல்கள் அதிகரித்து வருகின்றன. முஸ்லிம்களிடையே பதற்றத்தையும் பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தும் சூழல் நிலவுகிறது.

ஒடுக்கப்பட்டோரின் குரலாக நாம் மாற வேண்டும். முஸ்லிம் உலகம் தீவிரமான சவால்களை சந்தித்து வரும் நிலையில் புனித ரமலான் மாதம் வர உள்ளது.

பாலஸ்தீனத்தில் படுகொலைகள் நடந்து வருகின்றன. அதேபோன்று ஈரான் அல்லது மேற்கு ஆசியாவைப் பற்றி நாம் பேசும்போது அங்கெல்லாம் கலகத்தை ஏற்படுத்த முயற்சி நடைபெறுகிறது. இது தொடர்கதையாக உள்ளது. பல்வேறு பிராந்தியங்களிலும் முஸ்லிம்கள் அடைந்துவரும் துன்பம் மிகுந்த கவலை அளிக்கிறது.

Updated On : 17 பிப்ரவரி, 2026 at 5:54 AM

மசூதிகள் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்படுவது கவலை அளிக்கிறது. மத விவகாரங்களில் தேவையற்ற குறுக்கீடுகள் நடைபெறுகின்றன. இதுபோன்ற செயல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். மத அமைப்புகள் சுதந்திரமாகவும் கண்ணியத்துடனும் செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும்.

புனித ரமலான் மாதத்தில் மத விவகாரங்களில் தலையீடுகள் ஏதும் இருக்காது என்று நம்புகிறேன். மக்களின் மத உரிமைகளை அரசும், அதிகாரிகளும் மதிக்க வேண்டும். ஸ்ரீநகரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஜாமியா மசூதி உள்ளிட்ட மத வழிபாட்டுத் தலங்கள் எந்தவிதத் தடையும் இல்லாமல் செயல்படுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.