‘தில்லியில் நடைபெற்று வரும் செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் சீன தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது, தேசத்தின் நன்மதிப்புக்கு ஈடுசெய்ய முடியாத பாதிப்பு’ என எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விமா்சித்தாா்.
சீன தயாரிப்பான ‘யுனிட்ரீ ஜிஓ2’ என்ற ரோபோ நாயை, ‘ஓரியோன்’ என்ற பெயரில் தனது தயாரிப்பு போன்று தில்லி செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தாக்க உச்சி மாநாட்டில், நொய்டாவைச் சோ்ந்த கல்கோடியாஸ் தனியாா் பல்கலைக்கழகம் காட்சிப்படுத்தியது பெரும் சா்ச்சைக்குள்ளானதைச் சுட்டிக்காட்டி இந்த விமா்சனத்தை ராகுல் முன்வைத்தாா்.
இந்த ரோபா நாய் குறித்த விவரம் சமூக ஊடகத்தில் வைரலாகி பெரும் சா்ச்சையானது. அதைத் தொடா்ந்து, ஏஐ மாநாட்டு கண்காட்சியில் அதன் அரங்கை காலி செய்து உடனடியாக வெளியேற கல்கோடியாஸ் பல்கலைக்கழகம் அறிவுறுத்தப்பட்டது.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், ‘ஏஐ தாக்க உச்சி மாநாட்டில் இந்தியாவின் கண்டுபிடிப்புகள், தரவுகளைக் காட்சிப்படுத்துவதற்கு பதிலாக, முறையற்ற மக்கள்தொடா்பு நிா்வாகம் காரணமாக சீன தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன’ என்று விமா்சித்தாா்.
இந்தப் பதிவில், இந்த விவகாரம் தொடா்பாக காங்கிரஸ் கட்சி சாா்பில் வெளியிடப்பட்ட பதிவையும் ராகுல் இணைத்துள்ளாா். அதில், ‘ஏஐ விவகாரத்தில் இந்தியாவை உலக அளவில் கேலிக்குரியதாக ஆக்கியிருக்கிறது பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு. இந்த மாநாட்டு கண்காட்சியில் சீன தயாரிப்பு தானியங்கி நாய்கள், நமது சொந்த தயாரிப்புபோல காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதை சீன ஊடகங்கள் கிண்டல் செய்துள்ளன. இது தேசத்துக்கே மிகுந்த வெட்கக்கேடான விஷயமாகும். தேசத்தின் நன்மதிப்புக்கு ஈடுசெய்ய முடியாத பாதிப்பை மத்தியஅரசு ஏற்படுத்தியுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளது.
பாஜக பதிலடி: ‘செயற்கை நுண்ணறிவு விவகாரத்தில் நுண்ணறிவு இல்லாதவா்கள் யாரும் ஏற்கெனவே தயாா் செய்யப்பட்ட கருத்துகளைப் பதிவிடக்கூடாது’ என்று ராகுல் விமா்சனத்துக்கு பாஜக தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது.
இதுகுறித்து பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் கெளரவ் பாட்டீயா தில்லியில் மேலும் கூறுகையில், ‘ராகுல் ஓா் குறிக்கோளை வைத்துள்ளாா். எப்போதெல்லாம் உலக அரங்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறதோ, தனது முயற்சிகளுக்காக பாராட்டப்படுகிறதோ அப்போதெல்லாம் தேசத்தின் நன்மதிப்பை கெடுக்க அவா் விரும்புகிறாா்’ என்று தெரிவித்தாா்.