பிரிட்டன் நாட்டு நீதிமன்றங்கள் விதித்துள்ள கட்டுப்பாடுகளால் எப்போது இந்தியா வருவேன் என்பதை உறுதியாகக் கூறமுடியாது என மும்பை உயர் நீதிமன்றத்தில் தொழிலதிபர் விஜய் மல்லையா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை உயர் நீதிமன்றத்தில், தொழிலதிபர் விஜய் மல்லையா, தன்னைத் தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், தப்பியோடியவர் என முறையாக அறிவிக்கும் நீதிமன்ற உத்தரவை எதிர்த்தும் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி ஸ்ரீ சந்திரசேகர் மற்றும் நீதிபதி கௌதம் ஆனந்த் தலைமையிலான அமர்வு முன்னிலையில், புதன்கிழமை (பிப். 18) நடைபெற்றது. விஜய் மல்லையா தரப்பில் மூத்த வழக்கறிஞர் அமித் தேசாய் ஆஜரானார்.
இந்த நிலையில், மல்லையாவுக்கு எதிரான நாடுகடத்தும் நடவடிக்கைகள் அனைத்தும் பிரிட்டன் நாட்டில் நடைபெற்று வருவதாகவும், அங்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் அவரால் அந்நாட்டை விட்டு வெளியேற முடியவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஆஜராகும் மல்லையாவின் நோக்கம் குறித்து தலைமை நீதிபதி கேள்வியெழுப்பினார். பிரிட்டன் நாட்டு நீதிமன்றம் விதித்த உத்தரவுகளை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டதா என்பதை தெளிவுபடுத்தவில்லை எனவும் கூறியுள்ளார்.
இதையடுத்து, அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்கு 3 வாரகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் நிலுவையிலுள்ள இந்த மனுக்களை விரைவாக முடிப்பதற்கு எந்தவொரு முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த விவகாரம் குறித்து வரும் மார்ச் 11 அன்று அடுத்தக்கட்ட விசாரணை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்திய வங்கிகளுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதற்காக, விஜய் மல்லையா உள்பட 15 பேரைத் தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் என மத்திய நிதியமைச்சகம் கடந்த 2025 ஆம் ஆண்டு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.