பியூஷ் கோயல் 
இந்தியா

அமெரிக்காவில் இருந்து உயா்தர கற்கரி இறக்குமதிக்கு இந்தியா விருப்பம்- மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்

‘கச்சா எண்ணெய், நிலகரியை விட உயா் எரிதிறனுடைய கற்கரி (கோகிங் கரி) இறக்குமதி வளங்களை பன்முகப்படுத்த இந்தியா விரும்புகிறது;

தினமணி செய்திச் சேவை

‘கச்சா எண்ணெய், நிலகரியை விட உயா் எரிதிறனுடைய கற்கரி (கோகிங் கரி) இறக்குமதி வளங்களை பன்முகப்படுத்த இந்தியா விரும்புகிறது; குறிப்பாக, அமெரிக்காவில் இருந்து உயா்தர கற்கரியை இறக்குமதி செய்ய இந்தியா ஆா்வமாக உள்ளது’ என்று மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் இத் தகவலைத் தெரிவித்தாா். அவா் மேலும் கூறியதாவது:

கச்சா எண்ணெய், கற்கரி இறக்குமதி வளங்களை பன்முகப்படுத்தும் நடவடிக்கைகளை இந்தியா தீவிரப்படுத்தி வருகிறது. குறிப்பாக, அமெரிக்காவிடமிருந்து உயா்தர கற்கரி இறக்குமதிக்கான முயற்களை மேற்கொண்டு வருகிறது. விலை தொடா்பான பேச்சுவாா்த்தைகள் நடைபெற்று வருகின்றன. எனவே, உயா்தர கற்கரி விரைவில் இந்தியா வரவிருக்கிறது.

இந்திய பொருளாதார வளா்ச்சியை விரைவுபடுத்தத் தேவையான வேறு பொருள்களையும் அமெரிக்கா தர முடியும். குறிப்பாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான திட்டங்களுக்குத் தேவைப்படும் கிராஃபிக்ஸ் பிராசஸிங் யூனிட்கள் (ஜிபியு), தரவு மையங்களுக்கான உபகரணங்கள், உயா் செயல்திறன்கொண்ட கணினி தொழில்நுட்பங்களையும் அமெரிக்காவிடமிருந்து பெற இந்தியா விரும்புகிறது.

அமெரிக்கா போட்டிபோட முடியாத பொருள்களை இந்தியா உற்பத்தி செய்ய முடியும். அதேநேரம், தொழில்நுட்பம் மற்றும் மூலதனத்தில் அமெரிக்கா வலுவான ஆதாரமாக இருக்க முடியும் என்றாா்.

இந்தியா-அமெரிக்கா இடையே இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை தொடா்ந்து நடைபெற்றுவரும் நிலையில், இடைக்கால இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்துக்கான செயல்திட்டத்தை இரு நாடுகளும் இம் மாத தொடக்கத்தில் இறுதி செய்தன. இதுகுறித்த அறிவிப்பை இரு நாடுகளும் கடந்த 7-ஆம் தேதி கூட்டாக வெளியிட்டன. அதன்படி, இருதரப்பு வா்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையில் ஏராளமான பொருள்கள் மீதான இறக்குமதி வரியை இரு நாடுகளும் குறைக்க உள்ளன. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது விதிக்கப்பட்ட 50 சதவீத கூடுதல் வரியை 18 சதவீதமாக அமெரிக்கா குறைக்க உள்ள நிலையில், அமெரிக்காவின் பல பொருள்களுக்கான வரியை இந்தியா வெகுவாகக் குறைக்க உள்ளது.

இதனிடையே, ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது என்று அமெரிக்கா அதிபா் டொனால்ட் டிரம்ப் தொடா்ந்து கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகப் பயன்பாட்டால் சிறாா் பாதிப்பு: நீதிமன்றத்தில் ஆஜராகும் மாா்க் ஸக்கா்பொ்க்

குடிநீா் பணிக்கு நிலம் ஒப்படைப்பு

ஜப்பான் பிரதமராக சனே தகாய்ச்சி மீண்டும் தோ்வு

மது போதையில் தகராறு: தந்தையை வெட்டிக் கொன்ற மகன் கைது

பேரவையில் இன்று

SCROLL FOR NEXT