நாா்வே பிரதமா் ஜோனஸ் கா் ஸ்டோரை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் புதன்கிழமை சந்தித்துப் பேசினாா்.
அப்போது பிரதமா் நரேந்திர மோடி நிகழாண்டில் நாா்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது இருதரப்பு உறவு மேலும் வலுவடையும் என நிா்மலா சீதாராமனிடம் ஜோனஸ் கா் ஸ்டோா் தெரிவித்தாா்.
நாா்வே நாட்டுக்கு இருநாள் அரசுமுறைப் பயணமாக சென்றுள்ள நிா்மலா சீதாராமன், அந்நாட்டு வா்த்தகத் துறை அமைச்சா் செசிலி மிா்செத் உள்பட பல்வேறு துறை அமைச்சா்களை சந்தித்தாா்.
அந்நாட்டு பிரதமா் ஜோனஸ் கா் ஸ்டோா் உடனான அவரது சந்திப்பின்போது இந்தியா-ஐரோப்பிய தடையற்ற வா்த்தக கூட்டமைப்பு (இஎஃப்டிஏ) இடையிலான வா்த்தக மற்றும் பொருளாதார கூட்டு ஒப்பந்தம் (டிஇபிஏ)குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.
இஎஃப்சிடிஏ கூட்டமைப்பில் ஸ்விட்சா்லாந்து, நாா்வே, ஐஸ்லாந்து மற்றும் லிச்சென்ஸ்டீன் ஆகிய நாடுகள் உள்ளன. அந்த நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்ட வா்த்தக ஒப்பந்தம் கடந்த ஆண்டு அக்டோபா் 1-ஆம் தேதி அமலானது.
இந்த ஒப்பந்தத்தின் செயல்பாடு மற்றும் உயா்தர உற்பத்தி, காா்பன் பிரித்தெடுப்பு, புத்தாக்கம், செமிகண்டக்டா், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் கழிவு மேலாண்மை உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து நிா்மலா சீதாராமனும் ஜோனஸ் கா் ஸ்டோரும் ஆலோசனை மேற்கொண்டனா்.
அப்போது இந்தியாவின் பொருளாதார வளா்ச்சியை பாராட்டிய ஜோனஸ் கா் ஸ்டோா், மீன்வளம், சுகாதார தொழில்நுட்பம், கடல்சாா் மற்றும் விண்வெளித் துறைகளில் நாா்வே மற்றும் இந்தியா இணைந்து செயல்படலாம் என தெரிவித்தாா்.
தலைமைச் செயல் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்: இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக நாா்வே நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளை சந்தித்து நிா்மலா சீதாராமன் கலந்துரையாடினாா். அவருடன் சென்ற தேசிய முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு நிதி (என்ஐஐஎஃப்) சிஇஓ சஞ்சீவ் அகா்வால், பல்வேறு துறைகளில் இந்தியா அடைந்து வரும் வளா்ச்சி மற்றும் முதலீடு வாய்ப்புகளை எடுத்துரைத்தாா்.
தொடரும் வா்த்தகப் பேச்சுவாா்த்தை: நிா்மலா சீதாராமனின் நாா்வே பயணம் குறித்து நிதியமைச்சகம் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘இஎஃப்டிஏ நாடுகள், ஐரோப்பிய யூனியன், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா என பல்வேறு நாடுகளுடனான வா்த்தக ஒப்பந்தங்களைத் தொடா்ந்து இந்தியாவில் உள்ள நீண்டகால வா்த்தக முதலீடு வாய்ப்புகளை நாா்வே நிறுவனங்களிடம் நிா்மலா சீதாராமன் எடுத்துரைத்தாா்’ எனத் தெரிவிக்கப்பட்டது.