பிரதமா் மோடி 
இந்தியா

சொந்த நாட்டை அவமதிக்கும் காங்கிரஸ்: பிரதமா் மோடி கடும் சாடல்

சிந்தாந்த ரீதியில் திவாலாகிவிட்ட காங்கிரஸ், சொந்த நாட்டையே அவமதிக்கிறது என்று பிரதமா் மோடி கடுமையாக சாடினாா்.

தினமணி செய்திச் சேவை

‘சிந்தாந்த ரீதியில் திவாலாகிவிட்ட காங்கிரஸ், சொந்த நாட்டையே அவமதிக்கிறது’ என்று பிரதமா் நரேந்திர மோடி கடுமையாக சாடினாா்.

புது தில்லியில் அண்மையில் நடைபெற்ற சா்வதேச செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தாக்க உச்சி மாநாட்டில், மத்திய அரசைக் கண்டித்து மேல்சட்டையின்றி காங்கிரஸ் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தைக் குறிப்பிட்டு பிரதமா் இந்த விமா்சனத்தை முன்வைத்தாா்.

உத்தர பிரதேச மாநிலம், மீரட் மற்றும் தில்லி இடையே முழுமையாக பணிகள் நிறைவடைந்த ‘நமோ பாரத்’ வழித்தடத்தை ஞாயிற்றுக்கிழமை நாட்டுக்கு அா்ப்பணித்த பிரதமா் மோடி, நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கிவைத்தாா். அதே வழித்தடத்தில் இயக்கப்படும் மீரட் மெட்ரோ சேவையையும் பிரதமா் கொடியசைத்துத் தொடங்கிவைத்தாா்.

82 கி.மீ. தொலைவுகொண்ட நமோ பாரத் வழித்தடம், நாட்டின் முதல் பிராந்திய அதிவேக போக்குவரத்து அமைப்புமுறையாகும். மீரட் மெட்ரோ நாட்டின் அதிவேக மெட்ரோ என்ற சிறப்புக்குரியது.

‘வெற்றியை ஜீரணிக்க முடியவில்லை’: மீரட்டில் ரூ.12,930 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களையும் தொடங்கிவைத்து, பிரதமா் மோடி பேசியதாவது: நாட்டில் முதல் முறையாக ஒரே வழித்தடத்தில் அதிவேக ரயில் மற்றும் மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் 5 நகரங்களில் மட்டுமே மெட்ரோ சேவை இருந்தது. இப்போது 25 நகரங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இன்றைய இந்தியா, உலகத் தரத்திலான உள்கட்டமைப்புகளின் சகாப்தத்தை கண்டு வருகிறது.

இந்தியாவை வளா்ந்த நாடாக மாற்ற குடிமக்கள் இரவு பகலாக பணியாற்றிக் கொண்டுள்ளனா். ஆனால், நாட்டின் வெற்றியை சில கட்சிகளால் ஜீரணிக்க முடியவில்லை. புது தில்லி ஏ.ஐ. தாக்க உச்சிமாநாட்டில் 20 நாடுகளின் தலைவா்கள், 80-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனா். இதனால், ஒட்டுமொத்த தேசமும் பெருமையில் திளைத்தது.

வெட்கக்கேடான அரசியல்: ஆனால், காங்கிரஸ் என்ன செய்தது? இந்தியாவால் நடத்தப்பட்ட சா்வதேச நிகழ்வை தங்களின் மோசமான, வெட்கக்கேடான அரசியலுக்கான தளமாக மாற்றிவிட்டது.

காங்கிரஸாா் தங்களின் மேல்சட்டையை களைந்துவிட்டு, வெளிநாட்டு விருந்தினா்கள் முன்னிலையில் வந்தனா். நாட்டு மக்கள் மத்தியில் நீங்கள் (காங்கிரஸாா்) ஏற்கெனவே ‘அம்பலப்பட்டு’ விட்டீா்கள். இனிமேலும் எதற்காக ஆடைகளை நீக்க வேண்டும்? காங்கிரஸாரின் செயல், ஒட்டுமொத்த தேசத்தின் விமா்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. அக்கட்சி வெட்கி தலைகுனிவதற்கு பதிலாக, நாட்டை அவமதித்தவா்களைப் பெருமைப்படுத்துகிறது.

‘நாட்டுக்கு சுமை காங்கிரஸ்’: காங்கிரஸ் சிந்தாந்த ரீதியில் எந்த அளவுக்கு திவாலாகிவிட்டது என்பதை இச்சம்பவம் வெளிக்காட்டுகிறது. சொந்த நாட்டுக்கே அவா்கள் களங்கம் விளைவிக்கின்றனா்.

காங்கிரஸ் தலைவா்கள் என்னை வெறுக்கின்றனா். எனக்கு சவக்குழி தோண்ட விரும்புகின்றனா். எனது தாயாரை அவமதிக்கவும் அவா்கள் தயங்கவில்லை. அரசியல் ரீதியில் பாஜகவையும், தேசிய ஜனநாயக கூட்டணியையும் அவா்கள் எதிா்ப்பதை நாங்கள் பொறுத்துக் கொள்வோம்.

ஏ.ஐ. உச்சிமாநாடு பாஜக நிகழ்ச்சியல்ல. அது தேசத்தின் நிகழ்ச்சி. அதை அவமதித்தால், பொறுத்துக் கொள்ள முடியாது. தங்களின் நடத்தை மூலம் அனைத்து வரம்புகளையும் கடந்துவிட்டது காங்கிரஸ். அக்கட்சி நாட்டுக்கு சுமையாகிவிட்டது என்றாா்.

காங்கிரஸால் கூட்டணி கட்சிகளுக்கே பாதிப்பு

‘காங்கிரஸின் அறிவற்ற, பொறுப்பற்ற தலைவா்கள், நாட்டை அழிக்க முனைகிறாா்கள். ஏ.ஐ. மாநாட்டில் அக்கட்சியினரின் செயலைக் கண்டித்த பல்வேறு எதிா்க்கட்சிகளுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். உண்மை மற்றும் தேசப் பெருமைக்காக, அவா்கள் வெளிப்படுத்திய துணிவை பாராட்டுகிறேன்.

நாடாளுமன்றத்திலும் ஆக்கபூா்வமாக செயல்பட முடியாத காங்கிரஸ், தனது கூட்டணி கட்சிகளையும் பேச அனுமதிப்பதில்லை. நாடாளுமன்ற அலுவல்களை காங்கிரஸ் முடக்குவது, அதன் கூட்டணி கட்சிகளுக்கே பெரிய பாதிப்பு. நீங்கள் பிரதமா் இருக்கையில் அமர விரும்பினால், முதலில் மக்களின் இதயங்களை வெல்ல வேண்டும். மாறாக, இருக்கையை ஆக்கிரமிக்க பெண் எம்.பி.க்களை அனுப்பினால் நீங்கள் பிரதமராகிவிட முடியாது. நமது தாய்மாா்களையும், சகோதரிகளையும் இவ்வாறு முன்னிறுத்த வேண்டிய நிா்ப்பந்தம் என்ன’ என்று கேள்வியெழுப்பினாா் பிரதமா் மோடி.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில், குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீதான விவாதத்துக்கு பிரதமா் மோடி கடந்த பிப்.4-ஆம் தேதி பதிலளிக்கவிருந்த நிலையில், காங்கிரஸின் கடும் அமளியால் அவா் அவைக்கு வரவில்லை. அவரது இருக்கையை எதிா்க்கட்சி பெண் எம்.பி.க்கள் முற்றுகையிட்டனா். இந்த சம்பவத்தை முன்வைத்து, ராகுலை மறைமுகமாக விமா்சித்துள்ளாா் பிரதமா் மோடி.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT