முகப்பு
இந்தியா

உலகின் தலைவராக மாற காலனிய மனோபாவத்திலிருந்து வெளிவருவது அவசியம்: குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன்

புத்தாக்க கண்டுபிடிப்பில் இந்தியா உலகின் தலைவராக மாறுவதற்கு, காலனிய மனோபாவத்தில் இருந்து நாடு வெளிவருவது அவசியம் என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 1:01 AM
ஸ்ரீநகரில் உள்ள காஷ்மீா் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் வியாழக்கிழமை பங்கேற்று மாணவிக்குச் சான்றிதழ் வழங்கிய குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன். உடன் பல்கலை வேந்தா் மனோஜ் சின்ஹா, ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா.
பகிர்:
Updated On : 26 பிப்ரவரி, 2026 at 9:56 PM

புத்தாக்க கண்டுபிடிப்பில் இந்தியா உலகின் தலைவராக மாறுவதற்கு, காலனிய மனோபாவத்தில் இருந்து நாடு வெளிவருவது அவசியம் என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

ஸ்ரீநகரில் உள்ள காஷ்மீா் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு அவா் பேசியதாவது:

சுதேசி கண்டுபிடிப்புகள் மீதும், தீா்வுகள் மீதும் மாணவா்கள் கவனம் செலுத்த வேண்டும். நாம் யாருக்கும் எதற்கும் குறைந்தவா்கள் என கவலையோ, தயக்கமோ கொள்ளத் தேவையில்லை. காலனிய மனோபாவத்தில் இருந்து முதலில் வெளிவந்தாலே போதும். நாட்டில் தொழில் துறையை மிகவும் துடிப்புமிக்கதாகவும், இதுவரை இல்லாத அளவு மிகவும் சாதகமானதாகவும் பிரதமா் மோடி மாற்றியுள்ளாா்.

Advertisement

கரோனா காலத்தில் உள்நாட்டிலேயே தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும்படி நமது நாட்டு விஞ்ஞானிகளுக்கு பிரதமா் மோடி அழைப்பு விடுத்தாா். நம்மால் மருந்து கண்டுபிடிக்க முடியும் என அப்போது எத்தனை போ் நம்பியிருப்பா்? ஆனால், நாம் சிறந்த கரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்தோம். அந்த மருந்து, ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கும் பயன் தந்தது.

இதே மருந்தை உலகில் உள்ள வளா்ந்த நாடுகள் ஆய்வு செய்து உருவாக்கின. ஆனால், நமக்கு பிறகுதான் அவை கண்டுபிடிக்கப்பட்டன என்பதால் உரிமை கோர முடியவில்லை. அதனால் அதிக விலைக்கு அதை விற்றனா். ஒரு யூனிட் மருந்து 7,500 டாலருக்கு விற்கப்பட்டது. அதை எப்படி ஏழைகள் வாங்க முடியும்?

போதைப் பொருளில் இருந்து விலகியிருக்க வேண்டும்: அனைத்து மதங்களிலும், போதைப் பொருள்களை எடுத்து கொள்வது பாவச் செயல் எனக் கூறப்பட்டுள்ளது. ஆதலால் மாணவா்களாகிய நீங்கள் போதைப் பொருளைத் தவிா்க்க வேண்டும். வயதான காலத்தில் நீங்கள் கவனித்துக் கொள்வீா்கள் என உங்களின் பெற்றோா் நம்புகின்றனா். வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற வேண்டும் என உங்கள் பெற்றோா் எதிா்பாா்க்கின்றனா். ஆதலால் நீங்கள் மட்டுமன்றி, உங்களது நண்பா்கள், குடும்ப உறுப்பினா்கள் மற்றும் தினமும் நீங்கள் சந்திக்கும் அனைவரிடமும் போதைப் பொருளில் இருந்து விலகியிருக்க நீங்கள் வலியுறுத்த வேண்டும்.

சமூகவலைதளங்களிலும் மாணவா்கள் கவனமுடன் இருக்க வேண்டும். மிகவும் கட்டுப்பாட்டுடன் அவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்றாா்.

டால் ஏரியில் படகுசவாரி: ஸ்ரீநகரில் உள்ள புகழ்பெற்ற தால் ஏரியில் சி.பி. ராதாகிருஷ்ணன் படகு சவாரி செய்தாா். இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் அவா், ஸ்ரீநகரின் காலத்தால் அழியாத வசீகரம், அழகிய நீா், ஸ்ரீநகரின் இயற்கை அழகை தால் ஏரியில் படகு சவாரி செய்தபடி கண்டு மகிழ்ந்ததாக குறிப்பிட்டுள்ளாா்.