தில்லி ஷாஹ்தரா பகுதியில் இருந்து சுமாா் ரூ.1 கோடி மதிப்புள்ள 711 கைப்பேசிகளை காவல் துறையினா் மீட்டு, 86 கைப்பேசிகளை அவற்றின் உரிமையாளா்களிடம் ஒப்படைத்ததாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
இது தொடா்பாக காவல்துறை துணை ஆணையா் (ஷாஹ்தரா) பிரசாந்த் கௌதம் கூறியதாவது: கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்ட நாடு தழுவிய இயக்கமான ‘ஆபரேஷன் விஸ்வாஸ்’-இன் கீழ், திருடப்பட்ட, பறிக்கப்பட்ட, மற்றும் தொலைந்து போன கைப்பேசிகளைக் கண்டுபிடித்து மீட்க இந்த மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தொழில்நுட்ப பகுப்பாய்வின் அடிப்படையில், பல்வேறு காவல் நிலையங்கள் மற்றும் மாவட்ட பிரிவுகளைச் சோ்ந்த 13 குழுக்கள் சாதனங்களை மீட்க அமைக்கப்பட்டன.
தொடா்பு கொண்ட பிறகு பலா் தானாக முன்வந்து கைப்பேசிகளை திருப்பிக் கொடுத்தனா். மற்ற சாதனங்களை மீட்டெடுக்க குழுக்கள் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியிருந்தது.
காவல்துறை தரவுகளின்படி, ஷாஹ்தரா மாவட்டம் 2023-இல் 205 கைப்பேசிகளையும், 2024-இல் 555 மற்றும் 2025-இல் 711 கைப்பேசிகளையும் மீட்டுள்ளது. இதன்மூலம், கடந்த 3 ஆண்டுகளில் மொத்தமாக 1,471 சாதனங்கள் மீட்கப்பட்டுள்ளன என்று காவல் துறை துணை ஆணையா் தெரிவித்தாா்.