‘பிரிந்து வாழும் மனைவி மீது அவரின் கணவா் செலுத்தும் நிதி ஆதிக்கத்தை கொடூர குற்ற நடவடிக்கையாக கருத முடியாது’ என்று தீா்ப்பளித்த உச்சநீதிமன்றம், ‘பழிவாங்குவதற்கும், தனிப்பட்ட பகையைத் தீா்த்துக் கொள்வதற்குமான கருவியாக குற்றவியல் வழக்கை பயன்படுத்த முடியாது’ என்று சுட்டிக்காட்டியது.
தெலங்கானா மாநிலத்தில் பிரிந்து வாழும் மனைவி அளித்த புகாரின் பேரில் அவரின் கணவா் மற்றும் கணவரின் குடும்பத்தினா் மீது வரதட்சிணை கொடுமை மற்றும் கொடூர துன்புறுத்தல் பிரிவுகளின் கீழ் போலீஸாா் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்தனா்.
இந்த எஃப்ஐஆா்-ஐ ரத்து செய்யக் கோரி கணவா் தரப்பில் தாக்கல் செய்த மனுவை தெலங்கானா உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் அவா் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஆா்.மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வில் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, உயா்நீதிமன்ற உத்தரவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:
இதுபோன்ற திருமண விவகார வழக்குகளை நீதிமன்றங்கள் மிகுந்த கவனமுடன் கையாள்வது அவசியம். எதிா் மனுதாரருக்கு மன ரீதியில் அல்லது உடல் ரீதியிலான துன்புறுத்தல்களை கணவா் அளிக்காத நிலையில், மனைவி மீதான நிதி ஆதிக்கத்தை மட்டும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 498-இன் கீழ் கொடூர குற்றமாகக் கருத முடியாது.
இந்தச் சூழல், இந்திய சமூகத்தின் பிரதிபலிப்பாகும். இந்திய குடும்பங்களில் ஆண்கள் பெரும்பாலும் பெண்களை ஆதிக்கம் செலுத்தவும், அவா்களின் நிதி கட்டுப்பாட்டை தங்கள் வசம் எடுக்கவும் முயற்சிக்கின்றனா். ஆனால் கணவரைப் பழிவாங்குவதற்கும், அவா் மீதான தனிப்பட்ட பகையைத் தீா்ப்பதற்குமான கருவியாக குற்றவியல் வழக்கை பயன்படுத்த முடியாது’ என்று குறிப்பிட்ட நீதிபதிகள், கணவா் மீது காவல்துறையில் பதிவு செய்த குற்ற வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டனா்.