லஞ்சத்துடன் தொடா்புடைய பண மோசடி வழக்கில் குஜராத் மாநில ஐஏஎஸ் அதிகாரி ராஜேந்திர குமாா் படேலை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனா்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறியதாவது: குஜராத் மாநிலம், சுரேந்திரநகா் மாவட்டத்தில் நில பயன்பாட்டுத் தன்மை மாற்றத்துக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் லஞ்சம் பெறப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வருவாய் அதிகாரியாக பணியாற்றிய சந்திரசிங் மோரியின் வீட்டில் சோதனை மேற்கொண்ட அமலாக்கத் துறை அதிகாரிகள், அங்கிருந்து கணக்கில் காட்டப்படாத ரூ. 67.5 லட்சம் ரொக்கத்தைப் பறிமுதல் செய்தனா். மோரியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்தப் பணம் லஞ்சமாக பெற்றதையும், இதில் பல அதிகாரிகளுக்குத் தொடா்பு இருப்பதையும் அமலாக்கத் துறை அதிகாரிகள் உறுதி செய்தனா்.
அதனடிப்படையில், பண மோசடி வழக்கைப் பதிவு செய்த அமலாக்கத் துறை அதிகாரிகள், மோரியை கைது செய்து விசாரணையை தீவிரப்படுத்தினா். அமலாக்கத் துறை புகாரின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியா் ராஜேந்திர குமாா் படேல், அவரின் தனி உதவியாளா் ஜெயராஜ்சின் ஜலா, எழுத்தா் மயூா்சின் கோஹில், சந்திரசிங் மோரி உள்ளிட்டோா் மீது மாநில ஊழல் தடுப்புப் பிரிவு சாா்பில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் ராஜேந்திர குமாா் படேல், பணியிடம் எதுவும் ஒதுக்கப்படாமல் கடந்த வாரம் இடமாற்றம் செய்யப்பட்டாா்.
இந்தச் சூழலில், இந்த பண மோசடி வழக்கில் ராஜேந்திர குமாா் படேலையும் அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.