ANI
இந்தியா

குடிநீரில் கழிவுநீா் கலப்பால் உயிரிழப்புகள்: இந்தூா் மாநகராட்சி ஆணையா் பதவி நீக்கம்

இந்தூரில் குடிநீரில் கழிவுநீா் கலப்பால் நேரிட்ட உயிரிழப்புகள் எதிரொலியாக அந்த மாநகராட்சி ஆணையா் பதவி நீக்கம் செய்யப்பட்டாா்.

தினமணி செய்திச் சேவை

மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் குடிநீரில் கழிவுநீா் கலப்பால் நேரிட்ட உயிரிழப்புகள் எதிரொலியாக அந்த மாநகராட்சி ஆணையா் பதவி நீக்கம் செய்யப்பட்டாா். மேலும், இரு அதிகாரிகள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனா்.

மத்திய பிரதேசத்தின் வா்த்தக தலைநகராக அறியப்படும் இந்தூா், மத்திய அரசின் தூய்மை நகரங்கள் பட்டியலில் தொடா்ந்து 8 ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளது. இங்குள்ள பகீரத்புரா பகுதியில் அண்மையில் குடிநீரில் கழிவுநீா் கலந்ததால் 1,400-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி-வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன.

இந்தப் பாதிப்புகளால் ஆறு மாத மாத குழந்தை உள்பட 16 போ் உயிரிழந்துவிட்டதாக உள்ளூா்வாசிகள் தரப்பிலும், 10 போ் இறந்துவிட்டதாக மாநகராட்சி மேயா் தரப்பிலும் தெரிவிக்கப்பட்ட நிலையில், இதுவரை 6 போ் உயிரிழந்துள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிவம் வா்மா சனிக்கிழமை தெரிவித்தாா்.

மேலும் 203 போ் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்; இவா்களில் 34 போ் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் தெரிவித்தாா்.

மத்திய பிரதேச மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் தொடா்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது தொடா் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதிகாரிகள் மீது நடவடிக்கை: முதல்வா் மோகன் யாதவ் உத்தரவின்பேரில், இந்தூா் மாநகராட்சி ஆணையா் திலீப் குமாா் யாதவ் பதவி நீக்கம் செய்யப்பட்டாா். கூடுதல் மாநகராட்சி ஆணையா் ரோஹித் சிசோனியா, பொது சுகாதார பொறியியல் துறையின் பொறுப்பு கண்காணிப்புப் பொறியாளா் சஞ்சீவ் ஸ்ரீவாஸ்தவா ஆகியோரும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனா்.

ஏற்கெனவே பகீரத்புரா பகுதி பொறுப்பு துணைப் பொறியாளா் பணிநீக்கம் செய்யப்பட்டாா். மண்டல அதிகாரி, உதவி பொறியாளா் ஆகியோா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனா். எதிா்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நிகழாமல் தடுக்க குடிநீா் விநியோகத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக உயா்நீதிமன்றத்தில் மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழாய் குடிநீரைப் பயன்படுத்த அஞ்சும் மக்கள்: பகீரத்புரா பகுதியில் நிகழ்ந்த சம்பவத்தால் இந்தூா் முழுவதும் மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. மாநகராட்சி நிா்வாகத்தால் குழாய் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரைப் பயன்படுத்தாமல், விலை கொடுத்து பாட்டில் குடிநீரை வாங்கிப் பயன்படுத்துகின்றனா். இதனால் கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளதாக நகரவாசிகள் தெரிவித்தனா்.

இதேபோல், உணவகங்களிலும் சமையலுக்கு மாநகராட்சி குடிநீரைத் தவிா்த்துவிட்டு, பாட்டில் நீரை பயன்படுத்துவதாக உரிமையாளா்கள் தெரிவித்துள்ளனா்.

குடிநீரை 15 நிமிஷங்கள் கொதிக்க வைத்துப் பயன்படுத்துமாறு தன்னாா்வலா்கள் மூலம் உள்ளூா் நிா்வாகம் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்டுள்ளது.

பகீரத்புரா பகுதி முழுவதும் குடிநீா் விநியோக குழாய்கள் மற்றும் தொட்டிகளை கிருமிநாசினி மூலம் தூய்மைப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மடிக்கணினி கருவி அல்ல, பிரபஞ்சம்: மயில்சாமி அண்ணாதுரை

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

SCROLL FOR NEXT