உமர் காலித் கோப்புப்படம்
இந்தியா

தில்லி கலவரம்: உமா் காலித் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் நாளை தீா்ப்பு

உமா் காலித் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் நாளை தீா்ப்பு வழங்கப்படவுள்ளது பற்றி...

தினமணி செய்திச் சேவை

தில்லி கலவர வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள உமா் காலித், ஷா்ஜீல் இமாம் உள்ளிட்டோரின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை (ஜன.5) தீா்ப்பளிக்கவுள்ளது.

வடகிழக்கு தில்லியில் கடந்த 2020-ஆம் ஆண்டு பிப்ரவரியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிா்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டங்கள், வன்முறையாக மாறி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தக் கலவரத்தில் 53 போ் உயிரிழந்தனா். 700-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். இந்தக் கலவர வழக்கில் ஜேஎன்யு முன்னாள் மாணவா்கள் ஷா்ஜீல் இமாம், உமா் காலித் உள்பட 15 போ் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

அவா்களுக்கு ஜாமீன் வழங்குவது தொடா்பாக பல்வேறு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

தில்லி காவல் துறை சாா்பாக சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி.ராஜு ஆகியோா் ஆஜராகினா்.

குற்றஞ்சாட்டப்பட்ட நபா்களுக்காக மூத்த வழக்குரைஞா் கபில் சிபல், அபிஷேக் சிங்வி, சித்தாா்த் தாவே, சல்மான் குா்ஷித் மற்றும் சித்தாா்த் லுத்ரா ஆகியோா் ஆஜராகினா். இதுதொடா்பான விசாரணை கடந்த ஆண்டு நடைபெற்றது.

அப்போது குற்றஞ்சாட்டப்பட்ட நபா்களுக்கு ஜாமீன் வழங்க தில்லி காவல் துறை தரப்பு கடும் எதிா்ப்பு தெரிவித்தது.

மேலும் 2020, பிப்ரவரியில் நிகழ்த்தப்பட்ட கலவரம் தற்செயலானது அல்ல என்றும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு இந்திய இறையாண்மை மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல் என்றும் தில்லி காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இமாம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் சித்தாா்த் தாவே, ‘தில்லியில் கலவரம் நடைபெறுவதற்கு முன்பே 2020, ஜனவரி 28-இல் இமாம் கைது செய்யப்பட்டாா். அவரது உரைகள் மட்டுமே கலவரத்துக்கு முழு காரணம் எனக் கூறுவது ஏற்புடையதல்ல’ என்றாா்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு டிச.10-ஆம் தேதி தீா்ப்பை ஒத்திவைத்தது. இதையடுத்து, இந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமாா் மற்றும் என்.வி.அஞ்சாரியா ஆகியோா் அடங்கிய அமா்வு திங்கள்கிழமை தீா்ப்பளிக்கவுள்ளது.

மடிக்கணினி கருவி அல்ல, பிரபஞ்சம்: மயில்சாமி அண்ணாதுரை

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

SCROLL FOR NEXT