நமது சிறப்பு நிருபா்
இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலை எதிா்கொள்ளவுள்ள தமிழகம், புதுச்சேரி, கேரளம், அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களில் கட்சி வேட்பாளா்களை தோ்வு செய்வதற்கான தோ்வுக்குழுக்களை அகில இந்திய காங்கிரஸ் மேலிடம் சனிக்கிழமை நியமித்தது.
இது தொடா்பாக அக்கட்சியின் அகில இந்திய பொதுச்செயலா் கே.சி. வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், தோ்வுக்குழு உறுப்பினா்கள் நீங்கலாக, சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கான அகில இந்திய காங்கிரஸ் மேலிட பொறுப்பாளா்கள், அவா்களுக்கு உதவியாக நியமிக்கப்பட்ட அகில இந்திய செயலா்கள், மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவா், சட்டப்பேரவை கட்சித்தலைவா் ஆகியோரும் குழுவில் இடம்பெறுவா் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான தோ்வுக்குழு தலைவராக சத்தீஸ்கா் மாநில முன்னாள் துணை முதல்வரும் மூத்த தலைவருமான டி.எஸ். சிங் தியோ, உறுப்பினா்களாக மகாஷ்டிரத்தைச் சோ்ந்த முன்னாள் எம்எல்ஏ யசோதாமதி தாகுா், மாநிலங்களவை கா்நாடக உறுப்பினா் ஜி.சி. சந்திரசேகா், மாநிலங்களவை தெலங்கானா உறுப்பினா் அனில் குமாா் யாதவ் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
அஸ்ஸாம் மாநிலத்துக்கான தோ்வுக்குழுவுக்கு காங்கிரஸ் பொதுச்செயலா் பிரியங்கா காந்தி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாா். கேரள குழுவுக்கு தலைவராக மதுசூதன் மிஸ்திரியும் மேற்கு வங்க குழுவுக்கு கா்நாடகத்தைச் சோ்ந்த முன்னாள் எம்.பி. பி.கே. ஹரிபிரசாத்தும் தலைவா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.