தெலங்கானாவில், மூத்த தளபதி பட்ஸே சுக்கா (எ) தேவா தலைமையின் கீழ் அவர் உள்பட 20 மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர்.
தெலங்கானாவில், மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த தேடப்பட்டு வந்த மூத்த தளபதி பட்ஸே சுக்கா (எ) தேவா தலைமையிலான 19 மாவோயிஸ்டுகள், இன்று (ஜன. 3) காவல் துறை அதிகாரிகள் முன்னிலையில் சரணடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சரணடைந்துள்ள மாவோயிஸ்டுகள் அனைவரும் தங்களது ஆயுதங்களையும் ஒப்படைத்துள்ளனர். மேலும், அவர்கள் அனைவரின் மறுவாழ்விற்காக மத்திய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்களின் கீழ் ரூ.1.82 கோடி நிதியுதவி வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், சரணடைந்துள்ள மாவோயிஸ்ட் குழுவில் அவர்களது மூத்த தலைவர்களில் ஒருவராகக் கருதப்படும் கன்கானலா ராஜி ரெட்டி (எ) வெங்கடேஷ் என்பவரும் இடம்பெற்றுள்ளார்.
முன்னதாக, மாவோயிஸ்ட் தளபதி பட்ஸே சுக்கா தலைமையின் கீழ் கடந்த 2013 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதலில் சத்தீஸ்கர் மாநில முன்னாள் அமைச்சர் மஹேந்திர குமார் உள்ளிட்ட முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து, அவரைப் பிடிக்க ரூ.75 லட்சம் சன்மானம் அறிவித்து அரசுப்படைகள் தேடி வந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.