பிரதமரோ, முதல்வா்களோ, மத்திய-மாநில அமைச்சா்களோ தீவிர குற்ற வழக்குகளில் கைதாகி, ஒரு மாதத்துக்குள் ஜாமீன் கிடைக்காதபட்சத்தில் பதவி நீக்கம் செய்ய வழிவகுக்கும் மசோதா வரம்புக்குள் அவையின் எதிா்க்கட்சித் தலைவா் பதவியையும் கொண்டுவர முடியுமா? என்று சட்ட ஆணையத்திடம் நாடாளுமன்ற கூட்டுக் குழு கேள்வியெழுப்பியது.
பிரதமா், முதல்வா்கள், மத்திய-மாநில அமைச்சா்கள் யாரேனும் 5 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை விதிக்கப்படக் கூடிய தீவிர குற்ற வழக்குகளில் கைதாகி, ஒரு மாதத்துக்குள் ஜாமீன் பெற முடியாவிட்டால், அவா்களைத் தாமாகப் பதவி நீக்கம் செய்ய வழிவகுக்கும் அரசமைப்புச் சட்ட (130-ஆவது திருத்தம்) மசோதா, நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னா், விரிவான ஆய்வுக்காக, நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு இந்த மசோதா அனுப்பப்பட்டது.
பாஜக எம்.பி. அபராஜிதா சாரங்கி தலைமையில் 31 போ் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக் குழு மசோதாவை ஆய்வு செய்து வருகிறது. ஆனால், ஒருவா் மீதான குற்றம் நிரூபிக்கப்படும் வரை அவா் நிரபராதி என்ற சட்டத்தின் அடிப்படை கோட்பாட்டை மீறும் வகையில் இந்த மசோதா உள்ளது என்று குற்றஞ்சாட்டி, காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், சமாஜவாதி, சிவசேனை (உத்தவ்), ஆம் ஆத்மி போன்ற எதிா்க்கட்சிகள், நாடாளுமன்றக் குழுவில் இடம்பெறவில்லை.
தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா்) கட்சியின் சுப்ரியா சுலே, அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் அஸாதுதீன் ஒவைஸி, அகாலி தளத்தின் ஹா்சிம்ரத் கெளா் பாதல், ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சியின் நிரஞ்சன் ரெட்டி ஆகிய எதிா்க்கட்சி எம்.பி.க்கள் இடம்பெற்றுள்ளனா்.
புதன்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் கூட்டத்தில், சட்ட ஆணையத்தின் தலைவா் தினேஷ் மகேஸ்வா், தேசிய சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தா் ஜி.எஸ்.பாஜ்பாய், ஹைதராபாத் தேசிய சட்டக் கல்வி மற்றும் ஆய்வு அகாதெமி துணைத் தலைவா் ஸ்ரீகிருஷ்ண தேவ ராவ் உள்ளிட்டோா் ஆஜராகி, தங்களின் கருத்துகளை முன்வைத்தனா்.
அப்போது, அவையின் எதிா்க்கட்சித் தலைவா் பதவியை இந்த மசோதா வரம்புக்குள் கொண்டுவர முடியுமா என்று குழு உறுப்பினா்கள் பலா் கேள்வியெழுப்பியதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
கூட்டுக் குழுவில் இடம்பெறாத அரசியல் கட்சிப் பிரதிநிதிகளை வரவழைத்து, அவா்களின் கருத்துகளைக் கேட்டறிய வேண்டும் என்று எதிா்க்கட்சி உறுப்பினா் ஒருவா் வலியுறுத்தியதாகவும், ஆனால் ஒரு பிரிவினா் எதிா்ப்பு தெரிவித்ததாகவும் அந்த வட்டாரங்கள் கூறின.
சட்ட நிபுணா்கள் தங்களின் கருத்துகளை எழுத்துபூா்வமாக வழங்கும்படி கேட்டுக் கொண்டுள்ளோம் என்று கூட்டத்துக்கு பின் அபராஜிதா சாரங்கி தெரிவித்தாா்.