விமானங்களில் பவர் பேங்குகளை எடுத்துச் செல்வதற்கான புதிய கட்டுப்பாடுகளை மத்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அமல்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் லித்தியம் பேட்டரிகள் அதிக வெப்பமடைவது அல்லது தீப்பிடிப்பது போன்ற தொடர் சம்பவங்களை அடுத்து விதிமுறைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
'ஆபத்தான பொருள்கள்’ குறித்த அறிவுறுத்தல் சுற்றறிக்கை தற்போது பவர் பேங்க்கை விமானப் போக்குவரத்து அமைச்சகம் இணைத்துள்ளது.
இனி விமானப் பயணங்களின் போது, பவர் பேங்குகளைப் பயன்படுத்தி மொபைல் போன்கள், டேப்லெட்டுகள் அல்லது மடிக்கணினிகளை சார்ஜ் செய்ய பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. விமானத்தின் யூ.எஸ்.பி. போர்ட்கள் அல்லது இருக்கை மின் இணைப்புகளைப் பயன்படுத்தி பவர் பேங்கை சார்ஜ் செய்வதற்கும் இந்தத் தடை பொருந்தும்.
குறைவான திறன் கொண்ட 100 வாட் பவர் பேங்குகளை (27,000 எம்ஏஎச்) மட்டுமே விமானத்தில் எடுத்துச் செல்ல பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். அதையும், பயணிகள் தாங்கள் கைகளில் வைத்திருக்கும் பைகளில் மட்டுமே வைத்துக் கொள்ள வேண்டும். இருக்கையின் மேலுள்ள கேபின்களில் வைக்கக் கூடாது.
ஏனெனில், அத்தகைய இடங்களில் தீ விபத்து ஏற்பட்டால் அதனைக் கண்டறிந்து கட்டுப்படுத்துவது மிகவும் கடினம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லித்தியம் பேட்டரிகளுக்கு கட்டுப்பாடு ஏன்?
லித்தியம் பேட்டரிகள் அதிக ஆற்றல் கொண்டவை என்பதால் அது தீப்பித்தால் மிகவும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். அவற்றைக் கட்டுப்படுத்துவது கடினம்.
கட்டுப்பாடற்ற வெப்பமாக்கல், அதிக சார்ஜ் செய்தல், மோசமான உற்பத்தித் தரம், பழைய பேட்டரிகள் அல்லது தவறாகக் கையாளப்படுவதால் ஏற்படும் சேதம் ஆகியவற்றால் தூண்டப்படும் மின் கசிவு மூலம் லித்தியம் பேட்டரி தீப்பிடிக்கத் தொடங்கலாம். மற்ற தீ விபத்துகளைப் போலல்லாமல், லித்தியம் பேட்டரி தீப்பிடிப்புகள் தன்னிறைவு பெற்றவையாக இருக்கலாம் மற்றும் கையாள சிறப்பு முறைகள் தேவைப்படலாம் என்று மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்
பயணிகள் கொண்டு செல்லும் லித்தியம் பேட்டரியின் திறன் மற்றும் தரத்தை மதிப்பாய்வு செய்ய விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், கேபின்களில் பேட்டரி தொடர்பான தீ விபத்துகளைத் தடுப்பது, முன்கூட்டிய கண்டறிதல் உள்ளிட்டவை குறித்து பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்திலும், விமான நிலையத்திலும் பயணிகளுக்கு விழிப்புணர்வுகள் வழங்க வேண்டும் என்று மத்திய அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.