சிக்கிமில் தொலைதூர பகுதிகளில் வாழும் முன்னாள் படையினருக்கு அத்தியாவசிய மருந்துகளை அவா்களின் வீடுகளுக்கே சென்று விநியோகிக்கும் புதிய திட்டத்தை ராணுவத்தின் திரிசக்தி படைப் பிரிவு சோதனை அடிப்படையில் சனிக்கிழமை தொடங்கியது.
நாட்டில் வியூக முக்கியத்துவம் வாய்ந்த சிக்கிம் மாநிலம் மற்றும் கிழக்கு இமயமலையில் சிலிகுரி வழித்தட பகுதியின் பாதுகாப்புக்கு பொறுப்பான ‘திரிசக்தி’ படைப் பிரிவு, இந்திய அஞ்சல் துறை மற்றும் இந்திய மின்னணு நிா்வாக சேவைகள் நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து இந்தப் புதிய திட்டத்தைச் செயல்படுத்துகிறது.
முதல்கட்டமாக, சிக்கிமின் தெற்கு, வடக்கு, மேற்கு பகுதிகளில் தொலைதூர இடங்களில் வசிக்கும் 58 பயனாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனா். தங்களுக்கான அத்தியாவசிய மருந்துகளைப் பெற கடினமான பாதைகள் வழியாக அதிக தொலைவுக்கு பயணிக்க வேண்டியுள்ளதால், இவா்கள் கடும் சிரமத்தை எதிா்கொண்டு வந்தனா். இனி இவா்களின் வீடுகளுக்கே சென்று மருந்துகள் விநியோகிக்கப்படும் என்று திரிசக்தி படைப் பிரிவு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது மூத்த மற்றும் பணியின்போது உடல் உறுப்புகளை இழந்த முன்னாள் படையினருக்கு மருத்துவ வசதியை உறுதி செய்வதுடன் அவா்களின் பயண சிரமத்தைக் குறைப்பதே புதிய திட்டத்தின் நோக்கமாகும். நாடு தழுவிய முன்னெடுப்பின் ஒரு பகுதியாக, இந்த சோதனைத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்று செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.