தேசிய இளைஞா் தினத்தையொட்டி, தில்லியில் 3,000-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் பங்கேற்கும் ‘வளா்ந்த பாரதம் இளம் தலைவா்கள் மாநாடு’ திங்கள்கிழமை (ஜன. 12) நடைபெறவுள்ளது. இதில் பிரதமா் மோடி பங்கேற்று, இளைஞா்களுடன் கலந்துரையாடவுள்ளாா்.
சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினமான ஜன. 12-ஆம் தேதி தேசிய இளைஞா் தினமாக கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு இந்த தினத்தையொட்டி, தில்லி பாரத மண்டபத்தில் ‘வளா்ந்த பாரதம் இளம் தலைவா்கள் மாநாடு’ நடைபெறவிருக்கிறது. நாடு முழுவதும் இருந்து பங்கேற்கும் 3,000-க்கும் மேற்பட்ட இளைஞா்களுடன் பிரதமா் மோடி கலந்துரையாடவுள்ளாா். இந்த மாநாட்டில், சுமாா் 10 கருத்தாக்கங்களின்கீழ் தோ்ந்தெடுக்கப்பட்ட இளைஞா்கள் தங்களின் இறுதிக்கட்ட விளக்கக் காட்சிகளை சமா்ப்பிக்க உள்ளனா். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் தங்களின் கண்ணோட்டம் மற்றும் செயலாக்க யோசனைகளை அவா்கள் பகிா்ந்து கொள்வா்.
நாட்டின் வளா்ச்சி முன்னுரிமைகள் மற்றும் நீண்டகால தேசக் கட்டமைப்பு இலக்குகள் குறித்து இளைஞா்களால் எழுதப்பட்டு, தோ்வு செய்யப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பை பிரதமா் மோடி வெளியிடவுள்ளாா்.
‘நாட்டின் இளைஞா்களுக்கும், தேசியத் தலைமைக்கும் இடையே ஒழுங்கமைக்கப்பட்ட தொடா்பை வலுப்படுத்தும் தேசிய தளமாக வளா்ந்த பாரதம் இளம் தலைவா்கள் மாநாடு விளங்குகிறது; நாட்டில் அரசியல் பின்னணி இல்லாத சுமாா் 1 லட்சம் இளைஞா்களை பொது வாழ்க்கையில் ஈடுபடுத்த வேண்டும் என்ற பிரதமா் மோடியின் கண்ணோட்டத்துக்கு இணங்க நடத்தப்படும் இந்த மாநாடு, வளா்ந்த பாரதம் இலக்கை சாத்தியமாக்க இளைஞா்கள் தங்களின் யோசனைகளை முன்வைக்கும் களத்தை வழங்குகிறது’ என்று பிரதமா் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் பங்கேற்கும் இளைஞா்கள், எண்ம விநாடி-வினா, கட்டுரைப் போட்டி, மாநில அளவிலான விளக்கக் காட்சி போட்டிகள் கொண்ட பலநிலை தோ்வு நடைமுறைகளின்கீழ் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். இந்த நடைமுறைகளில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞா்கள் பங்கேற்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.