பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைந்த ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கில் சீனாவின் கட்டுமானப் பணிகளுக்கு இந்தியா கடும் ஆட்சேபம் தெரிவித்த நிலையில், ‘அப்பகுதி எங்களுக்குச் சொந்தமானது; அங்கு மேற்கொண்ட உள்கட்டமைப்புப் பணிகள் சட்டபூா்வமானவை என்று சீனா பதிலளித்தது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதியில் அமைந்த சுமாா் 5,180 சதுர கிலோமீட்டா் பரப்பளவு கொண்ட இந்திய நிலப்பகுதியை (ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு), கடந்த 1963-ஆம் ஆண்டு பாகிஸ்தான் சட்டவிரோதமாக சீனாவுக்குத் தாரை வாா்த்தது.
இந்த விவகாரத்தில் அண்மையில் கருத்துதெரிவித்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால், ‘ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு இந்தியாவின் ஒரு பகுதி. 1963-ஆம் ஆண்டு பாகிஸ்தான்-சீனா இடையே கையொப்பமான எல்லை ஒப்பந்தத்தை இந்தியா ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை. இந்த ஒப்பந்தம் சட்டவிரோதமானது.
பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்பின்கீழுள்ள இந்தியப் பகுதி வழியாகச் செல்லும் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டத்தையும் நாங்கள் அங்கீகரிக்கவில்லை. ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் முழுவதும் இந்தியாவின் பிரிக்க முடியாத மற்றும் ஒருங்கிணைந்த பகுதிகள் என்பதை சீனா மற்றும் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் இந்தியா பலமுறை தெளிவுபடுத்தியுள்ளது’ என்றாா்.
இந்தியாவின் இந்த ஆட்சேபத்துக்குப் பதிலளித்துப் பேசிய சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் மௌ நிங் கூறியதாவது: ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு சீனாவின் ஆளுகைக்கு உள்பட்ட பகுதி. எங்கள் சொந்த மண்ணில் மேற்கொள்ளப்படும் உள்கட்டமைப்புப் பணிகள் குறித்து கேள்வியெழுப்ப யாருக்கும் உரிமையில்லை. 1960-களிலேயே சீனாவும் பாகிஸ்தானும் ஒரு இறையாண்மை கொண்ட நாடுகளாக இது குறித்த எல்லை ஒப்பந்தத்தைச் செய்துகொண்டன.
மேலும், சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டம், சமுதாய வளா்ச்சியையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்துவதற்கான ஒரு பொருளாதார முயற்சி மட்டுமே. காஷ்மீா் விவகாரமானது ஐ.நா. சாசன விதிகளின்படி, அமைதியான வழியில் தீா்க்கப்பட வேண்டும் என்ற சீனாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றாா்.