இந்தியா

ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கிற்கு சீனா உரிமை கோருவதை ஏற்க முடியாது: லடாக் துணைநிலை ஆளுநர் திட்டவட்டம்

ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கிற்கு சீனா உரிமை கோருவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று லடாக்கின் துணைநிலை ஆளுநர் கவிந்தர் குப்தா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திச் சேவை

ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கிற்கு சீனா உரிமை கோருவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று லடாக்கின் துணைநிலை ஆளுநர் கவிந்தர் குப்தா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இமயமலையையொட்டி அமைந்துள்ள ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கு தனக்கு சொந்தம் என்று இந்தியா கூறிவருகிறது. எனினும், ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கிற்கு சீனா திங்கள்கிழமை மீண்டும் உரிமைகோரியது. அப்பகுதியில் தான் மேற்கொண்டுள்ள உள்கட்டமைப்புத் திட்டங்களையும் சீனா நியாயப்படுத்தியது.

இந்தச் சூழலில் இந்த விவகாரம் தொடர்பாக லடாக்கின் துணைநிலை ஆளுநர் கவிந்தர் குப்தா செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கிற்கு சீனா உரிமைகோருவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் முழுவதும் நமக்கே சொந்தம். தனது விரிவாக்கக் கொள்கையால் எதையும் சாதிக்க முடியாது என்பதை சீனா புரிந்து கொள்ள வேண்டும். இந்தியா திறன் வாய்ந்தது. 1962இல் இருந்த இந்தியா இப்போது கிடையாது. இப்போது இருப்பது 2026-ஆம் ஆண்டுக்கான இந்தியாவாகும். எந்த ஆக்கிரமிப்பு முயற்சியும் முறியடிக்கப்படும். இந்த விவகாரத்தை வெளியுறவு அமைச்சகம் கவனத்தில் கொண்டுள்ளது.

எந்த ஆக்கிரமிப்பு முயற்சியையும் சகித்துக்கொள்ள மாட்டோம். கடந்த காலத்தில் இருந்தது போலன்றி தற்போது இந்தியா பலமாக இருப்பதை சீனா உணர வேண்டும். கடந்த காலங்களில் அருணாசல பிரதேசத்துக்கும் சீனா உரிமை கோரியது.

பாகிஸ்தான் தனது சொந்த நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. பாகிஸ்தான் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள தேசத்தைப் போன்றதாகும்.

அந்த நாட்டுக்கு தனது இறையாண்மை குறித்தோ தனது மக்களைப் பற்றியோ கவலை இல்லை. பலூசிஸ்தான், சிந்த், கராச்சி போன்ற பகுதிகளில் மக்கள் சுதந்திரக் குரலை எழுப்புகின்றனர். அப்பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் அட்டூழியங்களை இழைத்து வருகிறது. அந்தப் பகுதிகளை ராணுவம்தான் நிர்வகிக்கிறது.

சிக்கலான விவகாரங்கள் தொடர்பாக உணர்ச்சியைத் தூண்டும் கருத்துகள் கூறப்படும் விவகாரத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

ஒட்டுமொத்த பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவுக்கே சொந்தம் என்பதை வலியுறுத்தி நம் நாட்டு நாடாளுமன்றத்தில் கடந்த 1994ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

"ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை தொடர்ந்து வருவதாக நமது ராணுவத் தளபதி கருத்து தெரிவித்துள்ளார். முப்படைகளுக்கும் நமது தேசத்தின் முழு ஆதரவும் உள்ளது.

ராணுவத் தளபதி பொறுப்பான முறையில் கருத்து தெரிவித்துள்ளதை நான் வரவேற்கிறேன்.

லடாக்கில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த சில தலைவர்கள் கூறியுள்ள கருத்தை ஏற்க முடியாது. லடாக் தற்போது வளர்ச்சிப் பாதையில் வேகமாகப் பயணிக்கிறது. லடாக் மக்கள் ஒற்றுமையுடன் உள்ளனர். தேசியவாதிகளான அவர்கள் வளர்ச்சிப் பணிகளில் அரசுக்கு முழு ஆதரவையும் அளித்து வருகின்றனர்.

இந்தப் பிராந்தியத்துக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் லடாக்கிற்கு பட்ஜெட்டில் ரூ.150 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஆனால் தற்போது இந்தப் பிராந்தியத்துக்கு பட்ஜெட்டில் ரூ.6,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நற்செய்தி தேடி வரும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

இளைஞரிடம் ரூ. 57 லட்சம் மோசடி

பேட்டையில் குடிநீா்த் தட்டுப்பாடு: மாநகராட்சியில் மனு

திருச்சி மாவட்டத்தில் மதுக்கடைகளை 2 நாள்கள் மூட உத்தரவு

நடந்து சென்ற மூதாட்டி வேன் மோதி உயிரிழப்பு

SCROLL FOR NEXT