இந்தியா

உலகளாவிய பண்டிகை பொங்கல்: பிரதமர் மோடி பெருமிதம்

உலகின் மிகப் பழைமையான வாழும் நாகரிகங்களில் ஒன்றான தமிழ்க் கலாசாரத்தின் பண்டிகையான பொங்கல் உலகளாவிய பண்டிகையாக கொண்டாடப்படுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

தினமணி செய்திச் சேவை

நமது நிருபர்

உலகின் மிகப் பழைமையான வாழும் நாகரிகங்களில் ஒன்றான தமிழ்க் கலாசாரத்தின் பண்டிகையான பொங்கல் உலகளாவிய பண்டிகையாக கொண்டாடப்படுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

தமிழகத்தின் அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தில்லியில் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு புதிய பானையில் பச்சரிசியை உலையில் இட்டு பொங்கல் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். மேலும், பானைக்கு தீபாராதனை காண்பித்தும், பசுக்களுக்கு வெல்லம் கலந்த அரிசியை வழங்கியும், வஸ்திரம் அணிவித்தும் மரியாதை செய்தார்.

இதைத் தொடர்ந்து இந்த விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் தமிழில் "பொங்கல் நல்வாழ்த்துகள்' எனக் கூறினார்.

எனக்கு கிடைத்த பாக்கியம்: அதன் பின்னர் விழா மேடையில் அவர் பேசியது: பொங்கல் இன்று உலகளாவிய பண்டிகையாக மாறியுள்ளது. தமிழ்ச் சமூகத்தினராலும், உலகம் முழுவதும் உள்ள தமிழ்க் கலாசாரத்தைப் போற்றுவோராலும் உற்சாகத்துடன் கொண்டாடப்படும் சிறப்புமிக்க இந்தப் பண்டிகையை அனைவருடனும் சேர்ந்து கொண்டாடுவது எனக்கு கிடைத்த பாக்கியமாகும்.

தமிழர் வாழ்வில், பொங்கல் ஓர் இனிமையான அனுபவமாகும். பூமிக்கும் சூரியனுக்கும் விவசாயிகளின் உழைப்புக்கும் நன்றி தெரிவிக்கும் அதே வேளையில், இயற்கை, குடும்பம் மற்றும் சமூகத்தில் சமநிலையை நோக்கி நம்மை அது வழிநடத்துகிறது.

இந்த நேரத்தில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் லோஹ்ரி, மகர சங்கராந்தி, மாக் பிஹு மற்றும் பிற பண்டிகைகளின் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பொங்கல் பண்டிகை உள்பட அனைத்துப் பண்டிகைகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்க் கலாசாரம்: கடந்த ஆண்டில், தமிழ்க் கலாசாரம் தொடர்பான பல நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. இது எனக்கு மிகுந்த மனமகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது. தமிழ்நாட்டில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழைமையான கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் பிரார்த்தனை செய்தேன். வாரணாசியில் நடைபெற்ற காசி - தமிழ்ச் சங்கமத்தின்போது, கலாசார ஒற்றுமையின் ஆற்றலைத் தொடர்ந்து உணர்ந்து, அதனுடன் இணைந்திருந்தேன்.

பாம்பன் ரயில் கடல் பாலத் திறப்பு விழாவுக்கு ராமேசுவரம் சென்றபோது, தமிழ் வரலாற்றின் மகத்துவத்தை மீண்டும் ஒருமுறை கண்டேன். தமிழ்க் கலாசாரம் ஒட்டுமொத்த தேசத்திற்கும், உண்மையில், மனிதகுலம் அனைத்திற்கும் பொதுவான பாரம்பரியமாகும்.

"ஒரே பாரதம் உன்னத பாரதம்' என்ற உணர்வு பொங்கல் போன்ற பண்டிகைகளால் மேலும் வலுப்பெறுகிறது. உலகில் உள்ள அனைத்து நாகரிகங்களும் வேளாண் பயிர்களுடன் தொடர்புடைய ஏதேனும் ஒரு பண்டிகையைக் கொண்டாடுகின்றன.

திருக்குறளில் விவசாயம்: தமிழ்க் கலாசாரத்தில், வாழ்க்கையின் அடித்தளமாக விவசாயி கருதப்படுகிறார். திருக்குறளில் விவசாயம் மற்றும் விவசாயிகள் பற்றி விரிவான கருத்துகள் இடம்பெற்றுள்ளன. தேசக் கட்டமைப்பில் விவசாயிகள் வலுவான பங்குதாரர்கள் ஆவர். அவர்களின் முயற்சிகள் தற்சார்பு இந்தியா திட்டத்திற்குப் பெரும் பலத்தை அளிக்கின்றன. இதனால், விவசாயிகளின் மேம்பாட்டிற்குத் தொடர்ந்து பாடுபட மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.

தமிழ்க் கலாசாரம் உலகின் வாழும் மிகவும் பழைமையான நாகரிகங்களில் ஒன்றாகும். தமிழ்க் கலாசாரம் பல நூற்றாண்டுகளை ஒன்றிணைக்கிறது. வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்கிறது. நிகழ்காலத்தை எதிர்காலத்தை நோக்கி வழிநடத்துகிறது. இதன் மூலம் ஈர்க்கப்பட்டு, இன்றைய இந்தியா அதன் வேர்களிலிருந்து வலிமையைப் பெற்று புதிய சாத்தியங்களை நோக்கி முன்னேறி வருகிறது.

மண் வளத்தைப் பாதுகாத்தல், நீரைச் சேமித்தல் மற்றும் எதிர்கால சந்ததியினருக்காக வளங்களை விவேகத்துடன் பயன்படுத்துதல் ஆகியவை அவசியமானவை.

"மிஷன் லைஃப்', "ஏக் பேட் மா கே நாம்' மற்றும் "அம்ரித் சரோவர்' போன்ற முன்முயற்சிகள் இந்த உணர்வையே பிரதிபலிக்கின்றன. மேலும், இந்த விழுமியங்களைக் கடைப்பிடிக்க நம்மை ஊக்குவிக்கின்றன என்றார் பிரதமர் நரேந்திர மோடி.

மேலும், அவர் தனது உரையின் நிறைவில் "இனிய பொங்கல் நல்வாழ்த்துகள், வாழ்க தமிழ், வாழ்க பாரதம். பொங்கலை ஒட்டி உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது இனிய பொங்கல் வாழ்த்துகள்' என்று கூறினார்.

இந்த நிகழ்வில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர்கள் ஜெ.பி. நட்டா, ஜி.கிஷண் ரெட்டி, அர்ஜுன் ராம் மேக்வால், ராம்மோகன் நாயுடு, பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நவீன், உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், கே.வி. விஸ்வநாதன், ஆர்.மகாதேவன், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர்- நீதிபதி வெ.இராமசுப்பிரமணியன், மத்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகர் ஆர்.வெங்கடரமணி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் தேசிய - தமிழக பாஜக தலைவர்கள், திரையுலக நட்சத்திரங்கள், தில்லிவாழ் தமிழர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போகி: சென்னையில் அதிகரித்த காற்று மாசு

கைது செய்யப்பட்ட விவசாயிகள் சங்க நிா்வாகிகளை விடுவிக்க வேண்டும்

போதிய இருக்கைகள் நிரம்பாததால் 3 சிறப்பு ரயில்கள் ரத்து

‘திருவள்ளுவா் தினத்தில் இறைச்சி விற்றால் நடவடிக்கை’

விளாப்பாக்கம் பேரூராட்சியில் பொங்கல் விழா

SCROLL FOR NEXT