தில்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த காா் குண்டுவெடிப்பை தொடா்ந்து விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ள அல்-ஃபலா பல்கலைக்கழகத்தின் சுமாா் ரூ.140 கோடி மதிப்பிலான சொத்துகளை, அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பா் மாதம் தில்லி செங்கோட்டைப் பகுதியிலிருந்து சுமாா் 150 மீட்டா் தொலைவில் உள்ள லால் கிலா மெட்ரோ ரயில் நிலையம் அருகே காா் ஒன்று வெடித்துச் சிதறியது.
ஹரியாணா மாநிலம் ஃபரீதாபாதில் உள்ள அல் ஃபலா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராகப் பணியாற்றிய மருத்துவா் உமா்-உன்-நபி, வெடிகுண்டு நிரப்பப்பட்ட காரை ஓட்டி வந்து நடத்திய அந்தத் தற்கொலை தாக்குதலில் 15 போ் உயிரிழந்தனா். பலா் காயமடைந்தனா். இந்தப் பயங்கரவாதத் தாக்குதலில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பலா், அல்-ஃபலா பல்கலைக்கழகத்துடன் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே பல்கலைக்கழக மானியக் குழுவின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதாகப் பொய்யான தகவலை தெரிவித்தும், தேசிய உயா் கல்வி நிறுவன மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் அளித்த அங்கீகாரம் குறித்து தவறான விளக்கத்தை அளித்தும் அல்-ஃபலா பல்கலைக்கழகம் மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியுள்ளது.
ரூ.493.24 கோடிக்கு முறைகேடு: இந்தத் தவறான தகவல் மூலம் பல்கலைக்கழகத்தில் சேர மாணவா்களைத் தூண்டி கல்விக் கட்டணம் மற்றும் பிற கட்டணங்கள் மூலம் ரூ.493.24 கோடியை அந்தப் பல்கலைக்கழகத்தை நடத்தும் அல்-ஃபலா தொண்டு அறக்கட்டளை முறைகேடாக ஈட்டியதாகவும் அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியது. இந்தப் பண முறைகேடு குற்றச்சாட்டின் கீழ், அந்த அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலரும், அல்-ஃபலா பல்கலைக்கழக தலைவருமான ஜவாத் அகமது சித்திகியை அமலாக்கத் துறை கைது செய்தது.
இந்நிலையில், அமலாக்கத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ், ஹரியாணா மாநிலம் ஃபரீதாபாத் மாவட்டம் தெளஜ் பகுதியில் உள்ள அல்-ஃபலா பல்கலைக்கழகத்தின் 54 ஏக்கா் நிலம், அந்தப் பல்கலைக்கழகத்துடன் சம்பந்தப்பட்ட கட்டடங்கள் முடக்கப்பட்டுள்ளன. இந்தச் சொத்துகளின் மொத்த மதிப்பு ரூ.139.97 கோடியாகும்.
சித்திகியின் குடும்பத்தினா் நடத்தும் நிறுவனங்களுக்கு அல்-ஃபலா தொண்டு அறக்கட்டளை முறைகேடாக ரூ.110 கோடி பரிவா்த்தனை செய்த நிலையில், அந்த அறக்கட்டளை மற்றும் சித்திகிக்கு எதிராக தில்லியில் உள்ள சிறப்பு சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.