நீதிபதி யஷ்வந்த் வர்மா file photo
இந்தியா

மக்களவை விசாரணைக்கு எதிரான நீதிபதி யஷ்வந்த் வா்மா மனு தள்ளுபடி!

ஊழல் வழக்குகளை விசாரிக்க அமைக்கப்பட்ட மக்களவை விசாரணை குழுவுக்கு எதிராக நீதிபதி யஷ்வந்த் வா்மா தாக்கல் செய்த மனு தள்ளுபடி

இணையதளச் செய்திப் பிரிவு

தனக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க, மக்களவைத் தலைவா் விசாரணைக் குழு அமைத்ததற்கு எதிராக அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மா தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்திருக்கிறது.

முன்னதாக, கடந்த வாரம், இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்து, தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று இந்த மனுவை தள்ளுபடி செய்வதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துவிட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதி தீபாங்கர் தத்தா தலைமையிலான அமர்வு மனுவை நிராகரித்ததோடு, நாடாளுமன்ற குழு தன்னுடைய விசாரணையை தொடர உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபாங்கா் தத்தா, சதீஷ் சந்திர சா்மா ஆகியோா் அடங்கிய அமா்வில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதியைப் பதவி நீக்கம் செய்யும் தீா்மானம் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் ஒரே நாளில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இரு அவைகள் சாா்பிலும் கூட்டாக விசாரணைக் குழு அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மாநிலங்களவையில் அந்தத் தீா்மானத்தை, அவையை அப்போது வழிநடத்திய துணைத் தலைவா் நிராகரித்துவிட்டாா். அதன்படி, விசாரணைக் குழுவை மக்களவைத் தலைவா் தன்னிச்சையாக அமைத்துள்ளாா். இது அரசமைப்புச் சட்டப் பிரிவு 124(5)-இன் கீழ் பின்பற்றப்பட வேண்டிய கட்டாய நடைமுறைகளை மீறிய செயலாகும்.

எனவே, மக்களவைத் தலைவா் அமைத்த விசாரணைக் குழு, நீதிபதிகள் மீதான விசாரணை சட்டப்படி செல்லாது’ என்று நீதிபதி யஷ்வந்த் வா்மா தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி வாதிட்டிருந்தார்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘ஓா் அவையில் தீா்மானம் நிராகரிக்கப்பட்டால், மற்றோா் அவையில் நடவடிக்கைகளைத் தொடர முடியாது அல்லது தானாக செல்லாததாகிவிடும் என சட்டத்தில் வெளிப்படையாகக் கூறப்படவில்லை. எனவே, மக்களவைத் தலைவா் விசாரணைக் குழு அமைத்ததில் சட்டப்படி தடை எதுவும் இல்லை என முதல்கட்டப் பாா்வையில் தெரியவருகிறது. அதே நேரம், இதில் சில குறைபாடுகள் இருப்பதாகவும் தோன்றுகிறது. இதுகுறித்து ஆராயப்படும்’ என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

நடந்தது என்ன?

தில்லி உயா்நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வா்மா பதவி வகித்தபோது, அவருடைய அரசு இல்லத்தில் கடந்த ஆண்டு மாா்ச் 14-ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, அங்குள்ள அறையில் பாதி எரிந்த மூட்டைகளில் கட்டுகட்டாகப் பணம் இருந்தது கண்டறியப்பட்டது. பின்னா், அந்தப் பணம் மாயமானது.

இந்த சா்ச்சை தொடா்பாக நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவியிலிருந்து நீக்க மக்களவை உறுப்பினா்கள் 146 போ் மற்றும் மாநிலங்களவையைச் சோ்ந்த 62 உறுப்பினா்கள் என மொத்தம் 208 எம்.பி.க்கள் சாா்பில் நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் சமா்ப்பிக்கப்பட்டது. மக்களவையில் நீதிபதியின் பதவிநீக்க தீா்மான நோட்டீஸ் ஏற்கப்பட்டது. மக்களவையில் இந்த விவகாரம் எடுத்துக்கொள்ளப்பட்டிருப்பதால், மாநிலங்களவையில் அந்தத் தீா்மானத்தை அவைத் தலைவா் நிராகரித்தாா்.

மக்களவையில் தீா்மானம் ஏற்கப்பட்டதைத் தொடா்ந்து, அதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமா்ப்பிக்க உச்சநீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமாா், சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவாஸ்தவா, கா்நாடக உயா்நீதிமன்ற மூத்த வழக்குரைஞா் பி.வி.ஆச்சாா்யா ஆகியோா் அடங்கிய மூவா் குழுவை மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா அமைத்தாா்.

இந்த விசாரணைக்குழுவுக்கு எதிராக, யஷ்வந்த் வர்மா உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

Justice Yashwant Verma's petition against the Lok Sabha inquiry committee formed to investigate corruption cases dismissed

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரானுக்கு ஆதரவாக காஷ்மீரில் மாபெரும் போராட்டம்! இஸ்ரேல், அமெரிக்காவுக்கு எதிராக முழக்கம்!

பொருளாதார பாதுகாப்புக்கு முன்னுரிமை: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளால் பாஜக தலைமை மகிழ்ச்சி! மகாராஷ்டிர மக்களுக்கு மோடி, அமித் ஷா நன்றி!

பயங்கரவாதிகள் மறைவிடங்களில் சிலிண்டர், சமையல் எண்ணெய் உள்பட பல பொருள்கள் கண்டெடுப்பு!

240க்கும் மேற்பட்ட சட்டவிரோத இணையவழி சூதாட்ட தளங்களுக்குத் தடை!

SCROLL FOR NEXT