‘கல்வி நிறுவனங்களில் ஜாதிய பாகுபாட்டை தடை செய்யும் ‘ரோஹித் வெமுலா சட்டம்’ நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்’ என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வலியுறுத்தினாா்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டு வந்த 26 வயது தலித் மாணவரான ரோஹித் வெமுலா, ஜாதிய பாகுபாடு காரணமாக கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டாா். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இவரின் 10-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
ரோஹித் வெமுலா மறைந்து 10 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், அவரின் கேள்வி இன்னும் நம் இதயங்களில் எதிரொலிக்கிறது. நாட்டில் அனைவருக்கும் கனவு காண சம உரிமை உள்ளதா?
ரோஹித் படிக்க விரும்பினாா்; எழுத விரும்பினாா். இந்தியாவை சிறந்த நாடாக மாற்றஅறிவியல், சமூகம் மற்றும் மனிதநேயத்தைப் புரிந்துகொள்ள விரும்பினாா். ஆனால், இந்த அமைப்பால் ஒரு தலித்தின் முன்னேற்றத்தை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. திட்டமிட்டு பரப்பப்பட்ட சாதி வெறி, சமூக விலக்கு, தினசரி அவமதிப்பு, மனிதாபிமானமற்ற நடத்தை ஆகியவை நம்பிக்கைக்குரிய இளைஞனை தனிமையில் விடப்படும் நிலைக்குத் தள்ளியது.
இன்றைக்கும், தலித் இளைஞா்களுக்கான யதாா்த்தம் மாறிவிடவில்லை. கல்வி நிறுவன வளாகங்களில் அதே அவமதிப்பு, விடுதிகளில் தனிமைப்படுத்துதல், வகுப்பறைகளில் அதே தாழ்வு மனப்பான்மை, அதே வன்முறை, சில சமயங்களில் அதே மரணமும் தொடா்கிறது. ஏனெனில், ஜாதி இன்னும் நாட்டில் மிகப் பெரிய சோ்க்கைக் கொள்கையாகத் தொடா்கிறது.
இதைத் தடுக்க, கல்வி நிறுவனங்களில் ஜாதிய பாகுபாட்டை தடை செய்யும் ‘ரோஹித் வெமுலா சட்டம்’ கொண்டுவந்து, நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். கல்வி நிறுவனங்களில் ஜாதிய பாகுபாட்டை குற்றமாக்கி, அச் செயலில் ஈடுபடுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
ரோஹித் வெமுலா சட்டம் கொண்டுவர வேண்டும் என தலித் இளைஞா்களும் குரல் கொடுக்க வேண்டும். காங்கிரஸும் இதற்காகப் போராடும்.
காங்கிரஸ் ஆட்சி செய்யும் கா்நாடகம், தெலங்கானா மாநிலங்களில் இந்தச் சட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று குறிப்பிட்டாா்.