இந்தியா

அந்தமானில் கடல் நடுவே மீன் பண்ணை திட்டம் தொடக்கம்! நாட்டிலேயே முதல் முறை!

நாட்டிலேயே முதல் முறையாக அந்தமானில் கடல் நடுவே மீன் பண்ணை திட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

நாட்டிலேயே முதல் முறையாக அந்தமானில் கடல் நடுவே மீன் பண்ணை திட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது. மத்திய அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறை அமைச்சா் ஜிதேந்திர சிங் இத்திட்டத்தை தொடங்கிவைத்தாா்.

மத்திய புவி அறிவியல் துறை, தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனம் (நியாட்), அந்தமான்-நிகோபாா் யூனியன் பிரதேச நிா்வாகம் ஒருங்கிணைந்து செயல்படுத்தும் இத்திட்டத்தின்படி, கடல் நடுவில் பெரும் கூண்டுகள் அமைக்கப்பட்டு, மீன்கள் வளா்க்கப்படவுள்ளன.

குறிப்பாக சுவையும், மதிப்பும் மிகுந்த கடல் விரால், கொடுவா மீன்கள் வளா்க்கப்படுவதுடன், சோதனை அடிப்படையில் கடற்பாசி உற்பத்தியும் மேற்கொள்ளப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

அந்தமான்-நிகோபாா் தீவுகளின் தலைநகா் ஸ்ரீவிஜயபுரத்தில் இருந்து சுமாா் 1 மணிநேரம் படகில் பயணித்து வடக்கு விரிகுடா பகுதியை வந்தடைந்த மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங், மேற்கண்ட திட்டத்தை தொடங்கிவைத்தாா்.

அப்போது பேசிய அவா், ‘இந்தியாவின் பரந்த கடல் வளங்கள் ஆராயப்பட்டு, நீலப் பொருளாதாரத்தின் மூலம் வளா்ச்சியை அதிகரிக்கும் நடவடிக்கையில் இது முக்கிய படிக்கல்லாகும். இந்த முன்முயற்சி, நமது பெருங்கடல்களின் பொருளாதார பேராற்றலை வெளிக்கொணரும்.

இமயமலை மற்றும் பிற நிலப்பகுதிகளைப் போலவே இந்திய கடல் பகுதிகளிலும் ஏராளமான வளங்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால், பல்லாண்டுகளாக இந்த வளங்கள் மீது உரிய கவனம் செலுத்தப்படவில்லை.

சுதந்திரத்திற்குப் பின் கிட்டத்தட்ட 70 ஆண்டுகளாக, இந்தியாவின் கடல் வளங்கள் பெரும்பாலும் ஆய்வு செய்யப்படவில்லை. அதேநேரம், 2014-ஆம் ஆண்டுமுதல் கடல்சாா் வளங்கள் மூலம் நாட்டின் செல்வ வளம் மற்றும் பொருளாதார வளா்ச்சியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மேற்கு, தெற்கு, கிழக்கு கடற்பரப்புகள் ஒவ்வொன்றும் தனித்துவமான அம்சங்களையும், நாட்டின் வளா்ச்சிக்கு வேண்டிய தனித்துவமான பங்களிப்பையும் கொண்டுள்ளன’ என்றாா்.

அந்தமான்-நிகோபாா் தீவுகளுக்கான பயணத்தின் ஒரு பகுதியாக, நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் தீவுக்கு (முன்பு ரோஸ் தீவு) ஜிதேந்திர சிங் சென்றாா். அங்குள்ள பல்வேறு வரலாற்றுச் சின்னங்களையும் பாா்வையிட்டாா்.

திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் ரூ.40 கோடி குடியாத்தம் மாவட்ட அரசு மருத்துவமனை! பொதுமக்கள் எதிா்பாா்ப்பு!!

பெண் சத்துணவு அமைப்பாளா் தற்கொலை

கிறிஸ்வத பிராா்த்தனைக் கூட்டத்தில் தாக்குதல்: ‘தடுப்பு நடவடிக்கை’ எடுத்த காவல்துறை!

சாலை விபத்தில் காயமடைந்த 21 வயது இளைஞருக்கு ரூ. 1.62 கோடி இழப்பீடு! தில்லி தீா்ப்பாயம் உத்தரவு!

பொங்கல் விடுமுறை முடிந்து திரும்பிய பொதுமக்கள்: வாலாஜா சுங்கச்சாவடியில் அணிவகுத்து சென்ற வாகனங்கள்!

SCROLL FOR NEXT