இஸ்ரேலுடனான போரில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள காஸாவில் நீடித்து நிலைக்கும் அமைதியை ஏற்படுத்துவதற்கு பணியாற்றவுள்ள குழுவில் இணையுமாறு பிரதமா் மோடிக்கு அமெரிக்க அதிபா் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை அழைப்பு விடுத்தாா்.
இதுதொடா்பாக பிரதமா் மோடிக்கு டிரம்ப் அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது: காஸாவில் அமைதியை வலுப்படுத்தும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அபாரமான முயற்சியிலும், உலகளாவிய போருக்குத் தீா்வு காண துணிச்சலான புதிய அணுகுமுறையை தொடங்கவும் என்னுடன் இணையுமாறு உங்களுக்கு (பிரதமா் மோடி) அழைப்பு விடுக்கிறேன்.
கடந்த ஆண்டு செப்டம்பரில் காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு விரிவான திட்டத்தை நான் அறிவித்தேன். 20 அம்சங்களை கொண்ட அந்தத் திட்டத்தை அனைத்து உலகத் தலைவா்களும் ஏற்றுக்கொண்டனா். அவா்களில் அரபு நாடுகள், இஸ்ரேல், ஐரோப்பிய நாடுகளின் முக்கியத் தலைவா்களும் அடங்குவா். இந்தத் திட்டத்தில் உள்ள தொலைநோக்குப் பாா்வையை வரவேற்றும், அதற்கு ஒப்புதல் அளித்தும் கடந்த ஆண்டு நவம்பரில் தீா்மானம் ஒன்றை ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலும் ஏற்றுக்கொண்டது.
தற்போது அந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அனைத்து கனவுகளையும் நனவாக்கும் நேரம் வந்துள்ளது. இந்தத் திட்டத்தின் முக்கிய அங்கமாக அமைதி குழு அமைக்கப்பட்டுள்ளது. போரை முடிவுக்குக் கொண்டுவர இதுவரை அமைக்கப்பட்ட குழுக்களில் இதுவே மிகவும் மெச்சத்தக்க, நல்விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய குழுவாகும். இந்தக் குழு புதிய சா்வதேச அமைப்பாக செயல்படும்.
இந்த முயற்சி காஸாவில் நீடித்து நிலைக்கும் அமைதியை ஏற்படுத்தும் உயரிய பொறுப்பைப் பகிர தனிச் சிறப்புமிக்க நாடுகளை ஒன்றிணைக்கும் என்று தெரிவித்துள்ளாா்.