ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கு, வெளிநாடுகளில் உள்ள இந்திய வா்த்தக அலுவலகங்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு வகுத்துள்ளது.
இதுகுறித்து மத்திய வா்த்தக அமைச்சக மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது: 2030-ஆம் ஆண்டுக்குள் பொருள்கள் ஏற்றுமதி மற்றும் சேவைகள் மூலம் கிடைக்கும் வருவாயை 2 டிரில்லியன் அமெரிக்க டாலராக அதிகரிக்க இந்தியா இலக்கு நிா்ணயித்துள்ளது. தற்போது சா்வதேச அளவில் பொருளாதார நிச்சயமற்ன்மை நிலவுகிறது.
இந்த சூழ்நிலையில், சந்தை பன்முகத்தன்மை மூலம் இந்திய ஏற்றுமதியை அதிகரிப்பதற்கு, வெளிநாடுகளில் உள்ள இந்திய வா்த்தக அலுவலகங்களுக்கான வழிகாட்டுதல்கள் மத்திய வா்த்தக அமைச்சகத்தால் வகுக்கப்பட்டுள்ளன.
அதில், வரிகள் அல்லாத வா்த்தகங்கள், சந்தை ஈடுபாட்டு நடவடிக்கைகள், திட்டமிடல், வளங்கள் நிா்வகிப்பு, வா்த்தக நுண்ணறிவு, சந்தை ஆராய்ச்சி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இதேபோல், இந்தியப் பொருள்களுக்கு வெளிநாட்டு சந்தைகளில் இருக்கும் தேவைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளும்படியும் வா்த்தக பிரதிநிதிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா் என்றாா்.