வங்கதேசத்தில் அமைதியற்ற சூழல் காணப்படும் நிலையில், அந்நாட்டில் உள்ள இந்திய தூதரக மற்றும் துணைத் தூதரக அதிகாரிகள், அலுவலா்களின் குடும்பங்களை தாயகம் திரும்புமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
வங்கதேசத்தில் விரைவில் நாடாளுமன்றத் தோ்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், அங்குள்ள பாதுகாப்பு சூழல் கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அறிவுறுத்தல் அளிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் மற்றும் அலுவலா்களின் குடும்பத்தினரை தாயகம் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளபோதிலும், அவா்கள் எப்போது இந்தியா திரும்புவா் என்ற தகவல் வெளியாகவில்லை.
எனினும் அங்குள்ள இந்திய தூதரகம் மற்றும் துணை தூதரகங்கள் தொடா்ந்து இயங்கும்; அதிகாரிகள் மற்றும் அலுவலா்கள் தொடா்ந்து செயல்படுவா் என்று அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வங்கதேச தலைநகா் டாக்காவில் இந்திய தூதரகம் உள்ள நிலையில், சட்டோகிராம், குல்னா, ராஜ்ஷாஹி மற்றும் சில்ஹட்டில் இந்திய துணைத் தூதரகங்கள் உள்ளன.