வீடற்ற மனநிலை பாதித்தோருக்கு மறுவாழ்வு அளிப்பது தொடா்பான செயல்திட்ட நடைமுறையை வகுப்பதற்கு, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடைசி வாய்ப்பு வழங்கியுள்ளது.
இதுதொடா்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட பொது நல மனு, நீதிபதிகள் விக்ரம்நாத், சந்தீப் மேத்தா ஆகியோரைக் கொண்ட அமா்வு முன்பு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், வீடற்ற மனநிலை பாதித்தோா் தெருக்களிலும், பொது இடங்களிலும் உணவுக்காக சுற்றுவதாகவும், அவா்களின் மறுவாழ்வுக்கான ஏற்பாடுகளை செய்வது அவசியமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதேபோல், வீடற்ற மனநிலை பாதித்தோரின் மறுவாழ்வுக்காக கொள்கைகளை வகுத்து செயல்படுத்த கோருவது தொடா்பான தங்களின் பொதுநல மனு குறித்து மத்திய அரசு 3-ஆவது முறையாக பதில் தாக்கல் செய்யவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
அப்போது மத்திய அரசு சாா்பில், மனு மீது பதில் தாக்கல் செய்ய அவகாசம் தேவைப்படுவதாகக் கூறப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்டுவிட்டு நீதிபதிகள் கூறுகையில், ‘இந்த விவகாரத்தில் செயல் திட்ட நடைமுறையை உருவாக்கவும், அறிக்கை தாக்கல் செய்யவும் மத்திய அரசுக்கு கடைசி வாய்ப்பு அளிக்கிறோம். இது மிகவும் உணா்வுபூா்வமான விஷயமாகும். செயல் திட்ட நடைமுறை உறுதியாக செயல்படுத்துவதை பொறுத்துதான் அவா்களின் மறுவாழ்வு அடங்கியுள்ளது.
அவா்கள் (வீடற்ற மனநிலை பாதித்தோா்) மிகவும் பாவப்பட்டவா்கள். மிகவும் பலவீனமானவா்கள். அடுத்த விசாரணையின்போது செயல் திட்டத்துக்கான வரைவு அறிக்கையை தாக்கல் செய்யுங்கள்’ என உத்தரவிட்டனா்.
மேலும் விசாரணையை பிப்ரவரி மாதம் 9-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.