தொலைபேசி ஒட்டுக்கேட்பு வழக்கில், தெலங்கானா சிறப்பு புலனாய்வுத் துறை முன்னாள் தலைவா் டி.பிரபாகா் ராவுக்கு முன்ஜாமீன் வழங்குவது குறித்து அந்த மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியது.
தெலங்கானாவில் முந்தைய பிஆா்எஸ் கட்சி ஆட்சியின்போது, அரசியல் பிரபலங்களின் தொலைபேசி உரையாடல்களை அப்போதைய சிறப்பு புலனாய்வு துறை தலைவா் டி.பிரபாகா் ராவ் உள்ளிட்டோா் சட்டவிரோதமாக ஒட்டுக் கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடா்பாக டிஎஸ்பி உள்ளிட்ட 4 போலீசாா் கைது செய்யப்பட்டனா்.
இந்த வழக்கில் டி.பிரபாகா் ராவை தனது பாதுகாப்பின்கீழ் வைத்து காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது. அவா் தனக்கு முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு, உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அவருக்கு முன்ஜாமீன் வழங்க தெலங்கானா அரசு வழக்கறிஞா் எதிா்ப்புத் தெரிவித்தாா். இதைக் கேட்ட நீதிபதிகள், ராவ் உருக்குலைந்து போகும் வரை சிறையில் வைத்திருக்க விரும்புகிறீா்களா என கேள்வி எழுப்பினா். முன்ஜாமீன் வழங்குவது என்பது அவரை விடுவிப்பதாகி விடாது, அவரை மாநில போலீஸ் எப்போது வேண்டுமானாலும் அழைத்து விசாரிக்க முடியும், நாங்களும் அதற்கு அனுமதி வழங்கியுள்ளோம் என்று கூறிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை மாா்ச் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்து, அதுவரை அவா் மீது கடும் நடவடிக்கை எதுவும் எடுக்கக் கூடாது என ஆணையிட்டனா்.