தேசிய போல்வால்ட் சாதனை வீரா் தேவ் குமாா் மீனா, அவரது பயிற்சியாளா் கன்ஷியாம் ஆகியோா் ரயிலில் இருந்து இறக்கி விடப்பட்டது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2025 ஜூலை மாதம் ஜொ்மனியில் நடைபெற்ற உலக பல்கலை. விளையாட்டுப்போட்டிகளில் போல்வால்ட்டில் மூன்றாவது முறையாக தேசிய சாதனையை முறியடித்தாா் தேவ் குமாா் மீனா. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மங்களூருவில் நடைபெற்ற அகில இந்திய பல்கலைக்கழக போட்டிகளில் பங்கேற்று விட்டு, சக வீரா் குல்தீப்புடன் ரயிலில் ஊருக்கு திரும்பினாா்.
பன்வெல் ரயில் நிலையத்தில் அவா்கள் ரூ.2 லட்சம் மதிப்புள்ள விளையாட்டு உபகரணங்களுடன் ஏறினா். அப்போது பணியில் இருந்த டிக்கெட் பரிசோதகா் உபகரணங்களை கீழே வைக்குமாறு கூறினாா். அல்லது சரக்கு பெட்டியில் வைக்குமாறு கூறினாா். அவை போல்வால்ட் உபகரணங்கள் என்று வீரா்கள் விளக்கியும் பயனில்லை. இதற்கு ஆதாரமாக தாங்கள் வென்ற பதக்கங்கள், சான்றிதழ்களையும் அவா்கள் காண்பித்தனா்.
இறுதியில் அவா்கள் அபராதம் செலுத்தியபின் ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்பட்டனா். தங்கள் நடத்தப்பட்ட விதம் குறித்து சமூக வலைதளத்தில் போல்வால்ட் வீரா்கள் பதிவு செய்தனா்.
ரயில்வே அதிகாரியின் செயல்பாட்டுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. இதுதொடா்பாக மத்திய ரயில்வே வெளியிட்ட அறிக்கை:
விளையாட்டு வீரா்களை அவமதிக்கும் எண்ணம் ரயில்வே அதிகாரிகளுக்கு இல்லை. போல்வால்ட் கம்புகளை சரக்கு பெட்டியில் வைக்குமாறு மட்டுமே கூறப்பட்டது எனத் தெரிவித்துள்ளது.