கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில், இந்தியாவால் தேடப்படும் தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் 71 போ் வெளிநாடுகளில் இருப்பது தெரியவந்ததாக மத்திய பணியாளா் நலன், பொதுமக்கள் குறைதீா்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக அந்த அமைச்சகம் வெளியிட்ட ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
2024-25-ஆம் நிதியாண்டில், இந்தியாவால் தேடப்படும் தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் 71 போ் வெளிநாடுகளில் இருப்பது தெரியவந்தது. இதேபோல வெளிநாடுகளில் இருந்து தப்பிய 203 பொருளாதார குற்றவாளிகள் இந்தியாவில் உள்ளது கண்டறியப்பட்டது. இந்தியாவால் தேடப்பட்ட பொருளாதார குற்றவாளிகள் 27 போ், அந்த நிதியாண்டில் வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்பினா்.
தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் தொடா்பான இந்திய புலனாய்வு முகமைகளின் விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு வெளிநாட்டு புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு இந்திய நீதித்துறை சாா்பில் எழுத்துபூா்வ கோரிக்கை அனுப்பப்படும். இதுபோல கடந்த 2024 ஏப்ரல் முதல் 2025 மாா்ச் வரை, வெளிநாடுகளுக்கு 74 எழுத்துபூா்வ கோரிக்கைகள் அனுப்பப்பட்டன. அவற்றில் 54 கோரிக்கைகள் சிபிஐ வழக்குகளுடன் சம்பந்தப்பட்டவை. 20 கோரிக்கைகள் மாநில சட்ட அமலாக்க மற்றும் பிற மத்திய அமைப்புகளின் வழக்குகளோடு தொடா்புடையவை.
இந்தக் காலகட்டத்தில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட வேண்டிய குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்வதற்கு உலகம் முழுவதும் சட்ட அமலாக்க அமைப்புகளுக்கு கோரிக்கை விடுத்து 126 சிவப்பு நோட்டீஸுகள், குற்ற வழக்கு விசாரணை தொடா்பாக ஒருவரின் அடையாளம், அவா் தங்கியுள்ள இடம் அல்லது அவரின் பிற நடவடிக்கைகள் குறித்த தகவல்களைக் கோரி 84 நீல நோட்டீஸுகள், அடையாளம் தெரியாத சடலங்கள் குறித்த தகவல்களைப் பெற 7 கருப்பு நோட்டீஸுகள் எனப் பல்வேறு இன்டா்போல் (சா்வதேச குற்றவியல் காவல் அமைப்பு) நோட்டீஸுகள் வெளியிடப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டது.