ஹரியாணாவில் வீட்டுப் பாடத்தின்போது 50 வரை எண்ணத் தெரியாத 4 வயது மகளை அடித்துக்கொன்ற தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹரியாணா மாநிலம், ஃபரிதாபாத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணா ஜெய்ஸ்வால்(31). இவருடைய 4 வயது மகள் வன்ஷிகா. 1 ஆம் வகுப்பு படிக்கும் தனது மகளுக்கு கிருஷ்ணா ஜெய்ஸ்வால் ஜனவரி 21 ஆம் தேதி வீட்டில் பாடம் நடத்திக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது தனது மகளை 50 வரை எண்ணச் சொல்லியிருக்கிறார். ஆனால் வன்ஷிகாவால் அதைச் செய்ய முடியவில்லை. இதில் கோபமடைந்த அவர் மகளைக் கடுமையாக தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தில் வன்ஷிகா மயக்கமடைந்தாள். இதனையடுத்து உடனடியாக மகளை அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
தனது மகள் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்துவிட்டதாக மருத்துவர்களிடம் கிருஷ்ணா பொய் சொல்லியிருக்கிறார். இருப்பினும், வன்ஷிகா பலியாகிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மனைவியிடமும் இதே பொய்யையே அவர் கூறியிருக்கிறார். மருத்துவமனைக்கு விரைந்த அவரது மனைவி, தனது மகளின் உடலில் பல காயங்கள் இருப்பதைக் கண்டுள்ளார். சந்தேகமடைந்த அவர் காவல் துறையிடம் இதுகுறித்து புகார் அளித்தார். ஆனால் கிருஷ்ணாவின் ஏழு வயது மகன், நடந்த அனைத்தையும் தாயாரிடமும், பின்னர் காவல் துறையினரிடமும் தெரிவித்துவிட்டான்.
புகாரின் பேரில், தந்தையைக் கைது செய்து, போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். கைதான கிருஷ்ணா ஜெய்ஸ்வால் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கிருஷ்ணா ஜெய்ஸ்வால் பல்லப்கரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திலும், அவரது மனைவி ரஞ்சிதா குமாரி மற்றொரு தனியார் நிறுவனத்திலும் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மேலும் இரு குழந்தைகள் உள்ளனர்.
கிருஷ்ணா ஜெய்ஸ்வால் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.