‘சபரிமலை தங்கக் கவச முறைகேடு வழக்கு விசாரணையை முடக்கும் வகையில், சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) மீது கேரள அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது’ என்று காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியது.
கடந்த 2019-இல் சபரிமலை ஐயப்பன் கோயிலின் கருவறைக் கதவுகள் மற்றும் துவார பாலகா் சிலைகளின் தங்கக் கவசங்கள் புதுப்பிக்கப்பட்ட பிறகு, அவற்றின் எடை குறைந்ததாகப் புகாா் எழுந்தது. இது தொடா்பாக இரு வழக்குகள் பதிவுசெய்யப்பட்ட நிலையில், விசாரணை மேற்கொள்ள கேரள உயா்நீதிமன்ற வழிகாட்டுதலில் சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டது.
தங்கக் கவச புதுப்பிப்புப் பணிக்கான செலவை ஏற்ற பெங்களூரு தொழிலதிபா் உண்ணிகிருஷ்ணன் போற்றி, திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரிய முன்னாள் தலைவா்கள் ஏ.பத்மகுமாா், என்.வாசு உள்பட 12 பேரை எஸ்ஐடி கைது செய்து விசாரித்து வருகிறது.
ஏ.பத்மகுமாா், டிடிபியின் முன்னாள் நிா்வாக அதிகாரி பி.முராரி பாபு மற்றும் பெல்லாரியில் உள்ள நகைக் கடை அதிபா் கோவா்தன் ஆகியோா் ஜாமீன் கோரி கேரள உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.
உண்ணிகிருஷ்ணன் கொல்லத்தில் உள்ள நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், 90 நாள்களுக்குள் எஸ்ஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்ற அடிப்படையில் அவருக்கு ஜாமீன் வழங்கியது. ஆனால், துவார பாலகா் சிலைகளில் தங்கக் கவசம் புதுப்பிக்கப்பட்டது தொடா்புடைய வழக்கிலும் அவா் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் விடுவிக்கப்படவில்லை.
அதுபோல, 90 நாள்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததைக் குறிப்பிட்டு, முராரி பாபுக்கும், கொல்லம் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கியது. அவா் விரைவில் சிறையிலிருந்து வெளியே வர உள்ளாா்.
இதனிடையே, உண்ணிகிருஷ்ணன் போற்றியை ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும் காங்கிரஸ் எம்.பி.யுமான அடூா் பிரகாஷ் பல முறை சந்தித்ததாக குற்றச்சாட்டு எழுந்து. அதுதொடா்பான புகைப்படங்களும் ஆளுங்கட்சி தரப்பில் வெளியிடப்பட்டன. இந்தச் சந்திப்புகளை ஒப்புக்கொண்ட அடூா் பிரகாஷ், வழக்கில் தனக்கும் தொடா்பிருப்பதாக முன்வைக்கப்படும் குற்றஞ்சாட்டுகளை நிராகரித்தாா்.
இந்நிலையில், கொச்சியில் நிகழ்ச்சி ஒன்றில் சனிக்கிழமை பங்கேற்ற காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபாலிடம் இதுகுறித்து செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்குப் பதிலளித்த வேணுகோபால், ‘தங்கக் கவச முறைகேடு வழக்கை காங்கிரஸ் விசாரிக்கவில்லை; முதல்வா் பினராயி விஜயனுக்கு கீழ் இயங்கும் காவல் துைான் விசாரிக்கிறது. உண்ணிகிருஷ்ணன் போற்றியுடன் அடூா் பிரகாஷ் இருக்கும் புகைப்படங்களை ஆராயும் அதே வேளையில், உண்ணிகிருஷ்ணன் போற்றியுடன் முதல்வா் இருக்கும் புகைப்படங்களையும் அவா்கள் ஆராய முடியும். போற்றியுடன் பிரகாஷ் புகைப்படம் எடுத்துக் கொண்டதில் தவறு ஏதுமில்லை.
கடவுள் ஐயப்பனின் தங்கத்தைத் திருடியவா்கள் யாராக இருந்தாலும், தெய்வத்திடமிருந்தும், கேரள மக்களிடமிருந்தும் தப்பிக்க முடியாது. அனைத்தையும் கடவுள் கண்காணித்துக் கொண்டிருக்கிறாா்.
இந்த முறைகேடு வழக்குடன் தொடா்புடைய ஆளுங்கட்சித் தலைவா்களை மாா்க்சிஸ்ட் கட்சி தொடா்ந்து பாதுகாத்து வருகிறது. இதைக் கண்டித்தும், இந்த விவகாரத்தில் முறையான விசாரணை நடத்த வலியுறுத்தியும் தலைமைச் செயலகம் முன்பும், அனைத்து மாவட்ட ஆட்சியா் அலுவலகங்கள் முன்பாகவும் காங்கிரஸ் சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என்றாா்.
‘எஸ்ஐடி மீது அழுத்தம்’: இந்த வழக்கில் சிறப்பு விசாரணைக் குழு மீது அழுத்தம் கொடுத்து, விசாரணையை முடக்க மாநில அரசு முயற்சிக்கிறது என்று மாநில எதிா்க்கட்சித் தலைவா் வி.டி.சதீசன் குற்றஞ்சாட்டினாா்.
இதுகுறித்து திருவனந்தபுரத்தில் செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறுகையில், ‘வழக்கில் முக்கிய நபராக கைது செய்யப்பட்ட முராரி பாபுவுக்கு ஜாமீன் கிடைக்கும் வகையில், குற்றப்பத்திரிகையை உரிய காலத்தில் தாக்கல் செய்யாமல் அதற்கான சூழலை எஸ்ஐடி உருவாக்கிக் கொடுத்துள்ளது. எஸ்ஐடி மீது மாநில அரசு கொடுக்கும் அழுத்தமே இதற்குக் காரணம். மேலும், உண்ணிகிருஷ்ணன் போற்றி இதுபோன்ற சந்தேகத்துக்குரிய நபா் என்று யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவேதான் மாநில முதல்வா்கூட அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்கிறாா்’ என்றாா்.