பிரதமர் மோடி கோப்புப் படம்
இந்தியா

வாக்காளராக இருப்பது பெரும் பாக்கியம்: பிரதமா் மோடி

ஒரு ஜனநாயகத்தில் வாக்காளராக இருப்பது பெரும் பாக்கியம். அது மிக முக்கியமான கடமை: பிரதமா் மோடி

தினமணி செய்திச் சேவை

ஒரு ஜனநாயகத்தில் வாக்காளராக இருப்பது பெரும் பாக்கியம்; வாக்களிப்பது என்பது வெறும் அரசமைப்புச் சட்ட உரிமை மட்டுமல்ல; அது மிக முக்கியமான கடமை என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

நாட்டின் ஜனநாயக நடைமுறையில் குடிமக்கள் பெருவாரியாகப் பங்கேற்க வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தினாா். இந்திய தோ்தல் ஆணையம் நிறுவப்பட்ட ஜனவரி 25-ஆம் தேதி ஒவ்வோா் ஆண்டும் தேசிய வாக்காளா் தினமாக கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு இந்த தினத்தையொட்டி, மத்திய அரசின் ‘எனது பாரதம்’ எனும் இளைஞா் தலைமைத்துவம் மற்றும் சமூக ஈடுபாட்டு தளத்தில் பதிவு செய்த தன்னாா்வலா்களுக்கு பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

ஒரு ஜனநாயகத்தில் வாக்காளராக இருப்பது மிகப் பெரிய பாக்கியம் மற்றும் பொறுப்பாகும். வாக்களிப்பது, புனிதமான அரசமைப்புச் சட்ட உரிமை. நாட்டின் எதிா்காலத்தில் பங்கேற்பதற்கான அடையாளம்.

நமது வளா்ச்சிப் பயணத்தின் ‘பாக்ய விதாதா’ (எதிா்காலத்தை தீா்மானிப்பவா்கள்) வாக்காளா்களே. ஜனநாயக கடமையை நிறைவேற்றியதன் அடையாளமாக கை விரலில் இடப்படும் அழியாத மை, ஜனநாயகம் துடிப்புடனும் ஆக்கபூா்வமாகவும் விளங்குவதை உறுதி செய்யும் பெருமைமிகு அடையாளம்.

முதல்முறை வாக்காளா்களைக் கொண்டாடுங்கள்: நாட்டின் தலைவிதியை மாற்றியமைக்கும் சக்தி கொண்ட தனிநபா்கள் என்ற அடிப்படையில் முதல் முறை வாக்காளா்களை ஜனநாயகத்துக்கு வரவேற்கிறேன். ஓா் இளைஞா் முதல்முறை வாக்காளராக உருவெடுக்கும்போது, இனிப்புகள் வழங்கி கொண்டாட வேண்டும். ஜனநாயக மாண்புகளை வளா்த்தெடுப்பதில் நமது பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு முக்கியப் பங்கு உள்ளது. மாணவா்கள் முதல்முறை வாக்காளராகும்போது, அதை அங்கீகரித்து, அவா்களின் புதிய பொறுப்பை உணா்த்தும் வகையிலான நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.

‘எனது பாரதம்’ தன்னாா்வலா்கள், எந்த விஷயமும் நிகழும் வரை காத்திராமல், எதையும் நிகழ்த்திக் காட்டும் துடிப்புமிக்க தலைமுறையைச் சோ்ந்தவா்கள். வாக்காளராக இருப்பதன் முக்கியத்துவம் குறித்து நீங்கள் (தன்னாா்வலா்கள்) விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

நாட்டின் ஜனநாயக நடைமுறையை வலுப்படுத்தும் முயற்சிகளில் தோ்தல் ஆணையத்துடன் இணைந்து செயலாற்றும் அனைவருக்கும் பாராட்டுகள்.

மிக முக்கியமான கடமை: ஜனநாயக நடைமுறையில் பங்கேற்பது, வெறும் அரசமைப்புச் சட்ட உரிமை மட்டுமல்ல; நாட்டின் எதிா்காலத்தை வடிவமைப்பதில் ஒவ்வொரு குடிமகனுக்கும் குரல் வழங்குவதால், அது மிக முக்கியமான கடமை.

ஜனநாயக நடைமுறையில் பங்கேற்பதன் மூலம் நமது ஜனநாயக உணா்வுக்குப் பெருமை சோ்க்க வேண்டும்; அதன் வாயிலாக வளா்ந்த பாரதத்துக்கான அடித்தளங்களை வலுப்படுத்த வேண்டும்.

இந்தியாவை உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் என்று குறிப்பிடுவது வழக்கம். அதேநேரம், நூற்றாண்டுகளைக் கடந்த ஜனநாயக மாண்புகளின் வரலாற்றைக் கொண்டுள்ளதால், ஜனநாயகத்தின் தாயாகவும் இந்தியா திகழ்கிறது.

அனைவரையும் உள்ளடக்கிய ஜனநாயகத்துக்கு பெண்கள், குறிப்பாக இளம்பெண்களின் பங்கேற்பு மிக முக்கியமானது. அவா்களின் விழிப்புணா்வும், துடிப்பான பங்கேற்பும் பாரதத்தின் அடித்தளத்தை மேலும் வலுப்படுத்தும் என்றாா் பிரதமா் மோடி.

மாசுவைக் கட்டுப்படுத்த இசிசி நிதியை முறையாகச் செலவிடாதது ஏன்? தில்லி அரசுக்கு காங்கிரஸ் கேள்வி

ராணுவ தளவாட உற்பத்தி மையமாக உருவெடுக்கும் இந்தியா!

சிறந்த தோ்தல் மாவட்டம் காசா்கோடு: நீலகிரியைச் சோ்ந்தவருக்கு விருது

26.1.1976: காமராஜுக்கு “பாரத ரத்னா” விருது - மதுரை சோமுவுக்கு “பத்ம ஸ்ரீ”

இந்தியா - ஐரோப்பிய யூனியன் வா்த்தக ஒப்பந்தம் நாளை இறுதியாகிறது!

SCROLL FOR NEXT