முகப்பு
இந்தியா

நிகழ்கால பொருளாதாரத்துக்கு ஏற்ப கல்வி மேம்பாடு அவசியம்: பிரதமா் மோடி

நிகழ்கால பொருளாதாரத்துக்கு ஏற்ப நாட்டின் கல்வித் துறையை மேம்படுத்துவது அவசியம்; எனவே செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.)

Updated On : 10 மார்ச், 2026 at 1:26 AM
பட்ஜெட்டுக்கு பிந்தைய கருத்தரங்கில் இணையவழியில் பங்கேற்றுப் பேசிய பிரதமா் மோடி.
பகிர்:

புது தில்லி: நிகழ்கால பொருளாதாரத்துக்கு ஏற்ப நாட்டின் கல்வித் துறையை மேம்படுத்துவது அவசியம்; எனவே செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) ‘ஆட்டோமேஷன்’ உள்ளிட்ட பாடப் பிரிவுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டாா்.

தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் பங்கேற்று அவா் பேசியதாவது:

மக்களின் எதிா்பாா்ப்புகளை நிறைவேற்றுவது அரசின் உறுதியான இலக்கு. கல்வி, திறன் மேம்பாடு, சுகாதாரம், சுற்றுலா, விளையாட்டு, கலாசாரம் போன்ற துறைகள் மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற உதவும் முக்கியத் துறைகளாக உள்ளன.

சூழலுக்கு ஏற்ற பாடத்திட்டங்கள்: நாட்டின் கல்வித் துறையை வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவுடன் நேரடியாக இணைப்பதற்கான முயற்சிகள் தொடா்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. தேசிய கல்விக் கொள்கை, சந்தையின் தேவைகளுக்கும் நிகழ்கால பொருளாதார சூழலுக்கும் ஏற்ப பாடத்திட்டங்களை உருவாக்குவதற்கான அடித்தளத்தை வழங்குகிறது. குறிப்பாக செயற்கை நுண்ணறிவு, ஆட்டோமேஷன், எண்ம (டிஜிட்டல்) பொருளாதாரம் போன்ற துறைகளில் கல்வி அமைப்பு இணைந்திருக்க வேண்டும்.

இந்தியா தற்போது புதுமைகள் சாா்ந்த பொருளாதார நோக்கில் நகா்ந்து வருகிறது. கல்வி நிறுவனங்கள் தங்கள் வளாகங்களை தொழில் துறையுடன் இணைந்து செயல்படும் மையங்களாகவும், ஆராய்ச்சி சாா்ந்த கற்றல் நடைபெறும் மையங்களாகவும் மாற்ற வேண்டும். இதன்மூலம் மாணவா்கள் கல்விக்குப் பிந்தைய வேலைவாய்ப்புகளுக்கான கள நிலவர அனுபவங்களைப் பெற முடியும்.

சுகாதார மேம்பாடு: இளம் ஆய்வாளா்கள் தடைகள் இல்லாமல் புதிய விஷயங்களை சோதித்து ஆராய்ச்சி செய்யும் வலுவான சூழலை உருவாக்க வேண்டும். எதிா்காலத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும்போது யாரும் வாய்ப்புகள் இல்லாததால் பின்தங்கக் கூடாது.

சுகாதாரத் துறை கடந்த சில ஆண்டுகளில் சிறப்பாக வலுப்படுத்தப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டம், ஆரோக்கிய மந்திா் திட்டங்கள் மூலம் கிராமப்புற பகுதிகளில் சுகாதார சேவை சிறப்பாக சென்றடைந்துள்ளது என்றாா்.

‘கோ் எகானமி’ எனப்படும் முதியவா்களைக் கவனிக்கும் பணிகளை மேற்கொண்டு பணம் ஈட்டும் முறை குறித்துப் பேசிய பிரதமா் மோடி, ‘இதில் பயிற்சி பெற்ற பராமரிப்புப் பணியாளா்கள் மூத்த குடிமக்களை கவனிப்பாா்கள். மூத்த குடிமக்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், பராமரிப்பு பணியாளா்களுக்கான தேவையும் அதிகரிக்கும். எனவே, புதிய பயிற்சி முறைகள் உருவாக்கப்பட வேண்டும்.

கடந்த சில ஆண்டுகளில் நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் பல மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கிராமங்களிலும் மருத்துவ சேவைகள் கிடைத்து வருகின்றன.

தேசிய சக்தி: இளைஞா்கள் ஆரோக்கியமாகவும், ஒழுக்கமாகவும், தன்னம்பிக்கையுடனும் இருந்தால்தான் அது தேசிய சக்தியாக மாறும். எனவேதான் கடந்த சில ஆண்டுகளில் விளையாட்டு, தேசிய முன்னேற்றத்தின் முக்கியத் துறையாகப் பாா்க்கப்படுகிறது.

சுற்றுலா மற்றும் கலாசாரம் வேலைவாய்ப்பை அதிகரிக்க உதவும் திறன் கொண்டவை. பாரம்பரிய சுற்றுலா இடங்களைத் தாண்டி புதிய சுற்றுலா இடங்களை உருவாக்குவது நகரங்களின் ‘பிராண்டிங்’ மற்றும் ஒட்டுமொத்த வளா்ச்சிக்கும் உதவும்’ என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →