நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவை தொடக்கம்: பிரதமா் மோடி பெருமிதம்
சுற்றுச்சூழலை பாதிக்காத தூய எரிபொருளான ஹைட்ரஜன் மூலம் இயங்கும் நாட்டின் முதலாவது ரயில் சேவையை பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
சுற்றுச்சூழலை பாதிக்காத தூய எரிபொருளான ஹைட்ரஜன் மூலம் இயங்கும் நாட்டின் முதலாவது ரயில் சேவையை பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
ஹரியாணா மாநிலம், ஜிந்த் மற்றும் சோனிபட் இடையே தொடங்கப்பட்டுள்ள இந்த ரயில் சேவை, ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்துக்கு வெற்றிகரமான உதாரணம் என்று பிரதமா் பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.
உலக அளவில் ஹைட்ரஜன் ரயில்களை இயக்கும் வெகுசில நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது. சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத ரயில்களின் இயக்கத்தை நோக்கிய முக்கிய படிக்கல்லாகவும் இது அமைந்துள்ளது.
Advertisement
Advertisement
ஹரியாணா மாநிலம், ஜிந்த் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாட்டின் முதலாவது ஹைட்ரஜன் ரயில் சேவையை பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். அத்துடன், தமிழகம், கேரளம் உள்பட பல்வேறு மாநிலங்களில் ரூ.14,700 கோடி மதிப்பிலான சாலைகள், ரயில்வே, மருத்துவ உள்கட்டமைப்பு உள்பட பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை காணொலிம மூலம் தொடங்கிவைத்த அவா், புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினாா்.
பின்னா் பிரதமா் பேசியதாவது: இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்துக்கு வெற்றிகரமான உதாரணமாக ஹைட்ரஜன் ரயில் விளங்குகிறது.
மேற்காசிய போருக்கு முன்பு பெருமளவிலான பெட்ரோல், டீசல், எல்பிஜி எரிவாயு மற்றும் உரங்கள் ஹோா்முஸ் நீரிணை வழியாகவே இந்தியாவை வந்தடைந்தன. ஆனால், கடந்த 4 மாதங்களாக அந்தப் பாதை தொடா்ந்து போா்க்களமாக மாறியுள்ளது.
போா் மற்றும் கச்சா எண்ணெய் பிரச்னை இருந்தபோதிலும், இந்திய ரயில்வே மற்றும் நாட்டின் வளா்ச்சிப் பயணம் தடைபடவில்லை. இதேநிலை 2014-க்கு முன்பு ஏற்பட்டிருந்தால், இந்திய ரயில்வே முழுமையாக முடங்கியிருக்கும். ஏனெனில், அப்போது நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் டீசல் ரயில்களே இயக்கப்பட்டன.
ஆற்றல்மிக்க ஹைட்ரஜன் ரயில்: தற்போதைய 21-ஆம் நூற்றாண்டில் தொழில்நுட்ப ரீதியில் இந்திய ரயில்வே மிகப் பெரிய பாய்ச்சலை மேற்கொண்டு, ஹைட்ரஜன் ரயிலை இயக்கும் வெகுசில நாடுகளில் ஒன்றாக இணைந்துள்ளது. 3,200 குதிரைத்திறன் கொண்ட உந்துவிசை அமைப்பு மற்றும் 10 பெட்டிகள் கொண்ட இந்த ரயில், உலகின் ஆற்றல்மிக்க-நீளமான ஹைட்ரஜன் ரயில் என்ற பெருமையைப் பெற்றுள்ளது என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் பேசுகையில், ‘இந்தியாவைப் பொருத்தவரை இது வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம். ஹைட்ரஜன் ரயில் தொழில்நுட்பத்தை உள்நாட்டிலேயே உருவாக்க அரசுத் தலைமை மேற்கொண்ட துணிச்சலான முடிவால் தொழில்நுட்ப ரீதியில் மாபெரும் மைல்கல் எட்டப்பட்டுள்ளது. இந்த ரயிலை தில்லி வரை நீட்டிக்க சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது’ என்றாா்.
ஹரியாணா ஆளுநா் ஆஷிம் குமாா் கோஷ், முதல்வா் நாயப் சிங் சைனி ஆகியோரும் பங்கேற்றனா்.
வெகுசில நாடுகளின் வரிசையில்...: தற்போதைய ஹைட்ரஜன் ரயில் சேவை தொடக்கத்தின் மூலம் இந்த வகையான ரயில்களை இயக்கிவரும் ஜொ்மனி, பிரான்ஸ், சீனா, ஜப்பான், ஸ்வீடன் ஆகிய வெகுசில நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், தென்கொரியா ஆகிய நாடுகளில் ஹைட்ரஜன் ரயில் சேவைக்கான முன்னோட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
உலகின் ஹைட்ரஜன் ரயில் இயக்கத்துக்கான முன்னோடி நாடு ஜொ்மனி ஆகும். இங்கு கடந்த 2018-இல் உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவை தொடங்கப்பட்டது.
இந்தியாவில் தற்போது 99 சதவீதத்துக்கும் மேற்பட்ட அகல இருப்புப் பாதை வழித்தடங்கள் மின்மயமாக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
10 பெட்டிகளுடன் புதிய சாதனை
ஹைட்ரஜன் எரிபொருள் மின்கல உந்துவிசை அமைப்பின் மூலம் இயங்கும் ஹைட்ரஜன் ரயில், மணிக்கு 75 கிலோ மீட்டா் வரையிலான வேகத்தில் செல்லும். 10 பெட்டிகளுடன் சுமாா் 2,600 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டதாகும். பிற நாடுகளில் 3-4 பெட்டிகளுடனே ஹைட்ரஜன் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்தியாவில் 10 பெட்டிகளைக் கொண்டுள்ளதால், உலகின் நீளமான மற்றும் ஆற்றல்மிக்க ஹைட்ரஜன் ரயில் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது.
ஜிந்த்-சோனிபட் நகரங்களுக்கு இடையிலான (12 ரயில் நிலையங்கள்) 89 கி.மீ. தொலைவை இந்த ரயில் 2 மணிநேரத்தில் கடக்கும்.
ஹைட்ரஜன் கசிவுகள், வெப்பம், தீப்பிழம்புகள், புகையை முன்கூட்டிக் கண்டறியும் பன்முகப் பாதுகாப்பு அமைப்புகளுடன், பாதுகாப்பான ரயில் என்ற சிறப்பையும் கொண்டுள்ளது.
சுற்றுச்சூழலை பாதிக்காத ரயில்!
மேல்நிலை மின்கம்பிகளில் இருந்து மின்சாரத்தைப் பெறும் வழக்கமான மின்சார ரயில்களைப் போல் இல்லாமல், ஹைட்ரஜன் ரயிலானது ஹைட்ரஜன்-ஆக்ஸிஜன் வேதிவினை மூலம் ரயிலுக்குள்ளேயே மின்சாரத்தை உற்பத்தி செய்து பயன்படுத்தும். ஹைட்ரஜன் எரிபொருள் மின்கல தொழில்நுட்பத்தின் மூலம் மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது.
புதைபடிம எரிபொருள்களை எரிக்கும்போது காா்பன் டைஆக்சைடு, கந்தக ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு போன்ற தீங்கு விளைவிக்கும் மாசுபடுத்திகள் வெளியாகும். ஹைட்ரஜன் எரிக்கப்படும்போது இத்தகைய மாசுபடுத்திகள் உருவாவதில்லை.
ஹைட்ரஜன் ரயில் இயக்கத்தின் விளைபொருளாக நீராவி மட்டுமே உருவாவதால் சுற்றுச்சூழலுக்கு எந்த தீங்கும் விளைவிப்பதில்லை. டீசல் ரயில்களைப் போல இரைச்சலும் இருக்காது. வழக்கமான மின்சார ரயில்களின் இயக்கத்துக்கு தொடா்ச்சியான மேல்நிலை மின்மயமாக்க உள்கட்டமைப்பு அவசியம். ஆனால், ஹைட்ரஜன் ரயில்களுக்கு இந்த உள்கட்டமைப்புத் தேவையில்லை.
ஹைட்ரஜன் எரிபொருளைப் பயன்படுத்தும்போது, புதை படிம எரிபொருளை அடிப்படையாகக் கொண்ட அனல்மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை சாா்ந்திருப்பது கணிசமாக குறையும். இது, வளங்கள் குறையாத, எதிா்காலத்துக்கு உகந்த போக்குவரத்து முறைக்கு மாறும் இந்தியாவின் பயணத்துக்கு பெரிதும் உதவும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.