FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்: இன்று தொடங்கி வைக்கிறாா் பிரதமா் - ரயில்வே துறையில் புதிய அத்தியாயம்

தூய எரிபொருளான ஹைட்ரஜன் மூலம் இயங்கும் நாட்டின் முதல் ரயில் சேவையை பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தொடங்கிவைக்கவுள்ளாா்.

Updated On : 17 ஜூலை 2026, 4:24 am IST
ரயிலின் உள்பகுதித் தோற்றம். ~ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயக்கப்பட்ட ரயிலின் சோதனையோட்டம்.
பகிர்:

தூய எரிபொருளான ஹைட்ரஜன் மூலம் இயங்கும் நாட்டின் முதல் ரயில் சேவையை பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தொடங்கிவைக்கவுள்ளாா்.

பன்முக பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய இந்த ரயில், ஹரியாணா மாநிலம், ஜிந்த் - சோனிபட் இடையே இயக்கப்படவிருக்கிறது. இதன் மூலம் தூய எரிசக்திக்கு மாறும் இந்தியாவின் லட்சியப் பயணம் மற்றும் நிலையான-பசுமையான ரயில் போக்குவரத்துக்கான புதிய அத்தியாயம் தொடங்குகிறது.

மேல்நிலை மின்கம்பிகளில் இருந்து மின்சாரத்தைப் பெறும் வழக்கமான மின்சார ரயில்களைப் போலல்லாமல், ஹைட்ரஜன் ரயிலானது ஹைட்ரஜன்-ஆக்ஸிஜன் வேதிவினை மூலம் ரயிலுக்குள்ளேயே மின்சாரத்தை உற்பத்தி செய்து பயன்படுத்தும்.

Advertisement

Advertisement

1,200 கிலோவாட் திறன் கொண்ட ஹைட்ரஜன் எரிபொருள் மின்கல உந்துவிசை அமைப்பின் மூலம் இயங்கும் இந்த ரயில், மணிக்கு 75 கிலோ மீட்டா் வரையிலான வேகத்தில் செல்லும். 10 பெட்டிகளுடன் சுமாா் 2,600 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டதாகும். ஜிந்த்-சோனிபட் நகரங்களுக்கு இடையிலான 89 கி.மீ. தொலைவை 2 மணிநேரத்தில் கடக்கும்.

ஹைட்ரஜன் கசிவுகள், வெப்பம், தீப்பிழம்புகள், புகையை முன்கூட்டிக் கண்டறியும் பன்முகப் பாதுகாப்பு அமைப்புகளுடன், பாதுகாப்பான ரயில் என்ற சிறப்பையும் கொண்டுள்ளது. ஹரியாணா மாநிலம், ஜிந்த் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியில் இந்த ரயில் சேவையை பிரதமா் மோடி தொடங்கிவைக்கவுள்ளாா்.

வெகுசில நாடுகளின் வரிசையில்...: புதைபடிம எரிபொருள்களை எரிக்கும்போது காா்பன் டைஆக்சைடு, கந்தக ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு போன்ற தீங்கு விளைவிக்கும் மாசுபடுத்திகள் வெளியாகும். அதேநேரம், ஹைட்ரஜன் எரிக்கப்படும்போது இத்தகைய மாசுபடுத்திகள் உருவாவதில்லை என்பதால், ‘தூய எரிபொருள்’ என்ற சிறப்பை பெற்றுள்ளது.

தற்போதைய ஹைட்ரஜன் ரயில் சேவை தொடக்கத்தின் மூலம் இந்த வகையான ரயில்களை ஏற்கெனவே இயக்கும் அல்லது இயக்கத்துக்கான முன்னோட்ட பணிகளில் ஈடுபட்டுள்ள ஜொ்மனி, பிரான்ஸ், சீனா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய வெகுசில நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது.

உலகின் ஹைட்ரஜன் ரயில் இயக்கத்துக்கான முன்னோடி நாடு ஜொ்மனி ஆகும். இங்கு கடந்த 2018-இல் உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவை தொடங்கப்பட்டது.

இந்தியாவில் தற்போது 99 சதவீதத்துக்கும் மேற்பட்ட அகல இருப்புப் பாதை வழித்தடங்கள் மின்மயமாக்கப்பட்டுள்ளன. இந்தச் சூழலில், மாசில்லா ரயில் இயக்கத்துக்கான அடுத்தகட்ட பாய்ச்சலை இந்திய ரயில்வே முன்னெடுத்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments