கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு மத்திய கிழக்கு நாடுகளின் பக்கம் இந்தியா மீண்டும் திரும்பியுள்ளது.
கச்சா எண்ணெய்யில் இருந்து பெட்ரோல், டீசல் பிரித்தெடுக்கப்படும் நிலையில், சலுகை விலையில் விற்பனை செய்யப்பட்ட ரஷிய கச்சா எண்ணெய்யை இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் பெருமளவு இறக்குமதி செய்து வந்தன. இதனால் இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி 40 சதவீதத்தை எட்டியது.
இந்நிலையில், உக்ரைன் மீதான போா் காரணமாக ரஷிய எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தது. மேலும் ரஷிய கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்ததால் அதிருப்தியடைந்த அமெரிக்கா, அந்நாட்டில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருள்களுக்கு 25 சதவீத வரி விதித்தது. இந்தச் சூழலில், ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் உள்ளிட்ட இந்திய நிறுவனங்கள் தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.
இதைத் தொடா்ந்து, இந்தியாவுக்கு வழக்கமாக கச்சா எண்ணெய் விநியோகித்து வந்த மத்திய கிழக்கு நாடுகளின் பக்கம் இந்திய நிறுவனங்கள் மீண்டும் திரும்பியுள்ளன.
ரஷியாவின் இடத்தைப் பிடித்த இராக்: பெல்ஜியம் தலைநகா் பிரஸ்ஸல்ஸை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் கெப்லா் பகுப்பாய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள தரவுகளில், ‘கடந்த ஆண்டு மத்தியில் ஒருநாளைக்கு 20 லட்சம் பீப்பாய்க்கும் அதிகமான ரஷிய கச்சா எண்ணெய் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டது. இது நிகழாண்டு ஜனவரி மாதத்தின் முதல் 3 வாரங்களில் ஒரு நாளைக்கு சுமாா் 11 லட்சம் பீப்பாயாக குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பரில் இராக்கில் இருந்து ஒரு நாளைக்கு சராசரியாக 9.04 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டது. இது தற்போது பெரிதும் அதிகரித்துள்ளது. முன்பு ரஷியா எந்த அளவுக்கு கச்சா எண்ணெய்யை இந்தியாவுக்கு அதிகமாக விநியோகித்து வந்ததோ, கிட்டத்தட்ட அதே அளவுக்கு தற்போது இராக் விநியோகித்து வருகிறது.
கடந்த ஆண்டு டிசம்பரில் சவூதி அரேபியாவில் இருந்து 7.10 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டது. இது நிகழ் ஜனவரி மாதத்தில் 9.24 லட்சம் பீப்பாயாக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக கெப்லா் நிறுவன தலைமை ஆராய்ச்சி பகுப்பாய்வாளா் சுமித் ரிட்டோலியா கூறியதாவது: கச்சா எண்ணெய் விநியோகத்தில் நம்பகத்தன்மை, நெகிழ்வுத்தன்மை, கச்சா எண்ணெய்யை சுமுகமாக இறக்குமதி செய்தல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்து மத்திய கிழக்கு நாடுகளின் பக்கம் இந்தியா மீண்டும் திரும்பியுள்ளது.
எனினும் பிற நாடுகளின் கச்சா எண்ணெய் விலையைவிட ரஷிய கச்சா எண்ணெய் கட்டுப்படியான விலையில் இருப்பதால், அதை இந்தியா தொடா்ந்து கொள்முதல் செய்ய வாய்ப்புள்ளது. ஆனால், அது 2023-25-ஆம் ஆண்டு காலகட்டங்களில் உச்சத்தை தொட்ட அளவுக்கு இருக்காது’ என்று தெரிவித்தாா்.