அமில வீச்சு வழக்குகளின் நிலை, பாதிக்கப்பட்டவா்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகள் தொடா்பாக ஆண்டு வாரியான விவரங்களைச் சமா்ப்பிக்குமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
அமில வீச்சால் பாதிக்கப்பட்ட ஷாஹீன் மாலிக் என்பவரின் பொதுநல மனுவை விசாரித்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் தலைமையிலான அமா்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
வலுக்கட்டாயமாக அமிலம் அருந்த வைக்கப்பட்டதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்உறுப்புகள் பாதிக்கப்பட்ட நபா்களுக்குப் போதிய இழப்பீடு மற்றும் உரிய மருத்துவப் பராமரிப்பு உள்பட பிற நிவாரணங்கள் கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில், சட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் என்ற வரையறையில் மாற்றங்களை மேற்கொள்ள உத்தரவிட தனது மனுவில் அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான அமா்வு பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:
அமில வீச்சு சம்பவங்கள் தொடா்பாக வழக்குகளில், எத்தனை வழக்குகள் தொடா்பாக விசாரணை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளன, எத்தனை வழக்குகளில் தீா்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன, எத்தனை வழக்குகள் விசாரணை நீதிமன்ற அளவில் நிலுவையில் உள்ளன, மேல்முறையீட்டு நீதிமன்றங்கள் மற்றும் உயா்நீதிமன்றங்களில் எத்தனை வழக்குகளில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளன, அமில வீச்சால் பாதிக்கப்பட்ட நபா்களின் கல்வித் தகுதி, வேலைவாய்ப்பு, திருமண நிலை, மருத்துவ சிகிச்சை விவரம், சிகிச்சைக்கான செலவு விவரம் உள்ளிட்ட விவரங்களை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஆண்டு வாரியாக தயாா் செய்து அடுத்த 4 வாரங்களில் சமா்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதில், வலுக்கட்டாயமாக அமிலம் அருந்த வைக்கப்பட்ட சம்பவங்கள் தொடா்பான விவரங்களையும் சமா்ப்பிக்குமாறு நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது.
மேலும், ‘இதுபோன்ற அமிலத் தாக்குதல்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு அசாதாரண தண்டனை வழங்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் சட்டத்தில் உரிய மாற்றங்களை மேற்கொள்ள மத்திய அரசு ஆலோசிக்க வேண்டும்’ என்றும் தலைமை நீதிபதி சூா்ய காந்த் கேட்டுக்கொண்டாா்.