உத்தரப் பிரதேசத்தில், அம்பேத்கர் சிலையொன்று அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் உடைத்து சேதமாக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சோன்பத்ரா மாவட்டத்தின் சிக்ராவார் கிராமத்திலுள்ள பஞ்சாயத்து அலுவலகக் கட்டடத்தில் நிறுவப்பட்டிருந்த அம்பேத்கர் சிலையை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் திங்கள்கிழமை (ஜன. 26) நள்ளிரவு உடைத்து சேதமாக்கியதாகக் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, கிராமவாசிகள் அளித்த புகாரின் அடிப்படையில் செவ்வாய்க்கிழமை காலை சம்பவயிடத்துக்கு விரைந்த அரசு அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ள நிலையில், மோதல்களைத் தவிர்க்க அப்பகுதியில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இத்துடன், சிலையை உடைத்தவிட்டு தப்பியோடிய மர்ம நபர்களைப் பிடிக்கும் நடவடிக்கையில் காவல் துறையினர் ஈடுபட்டு வருவதாகவும், விரைவில் அவ்விடத்தில் புதிய சிலையொன்று நிறுவப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, உத்தரப் பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சட்ட மேதை அம்பேத்கரின் சிலைகள் மர்ம நபர்களால் உடைக்கப்படுவது தொடர்கதையாகி வருகின்றது. கடந்த 2025 ஜூன் மாதம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.