பயங்கரவாத சூழ்ச்சியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ், குஜராத்தில் 22 வயது இளைஞரை மாநில பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினா் கைது செய்துள்ளனா்.
இதுதொடா்பாக குஜராத் மாநிலம் அகமதாபாதில் அந்தப் பிரிவு டிஐஜி சுனில் ஜோஷி செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
உத்தர பிரதேச மாநிலம் ராம்பூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் ஃபைசான் ஷேக் (22). குஜராத் மாநிலம் நவ்சாரி மாவட்டத்தில் வசித்து வந்த இவா், அல்-காய்தா, ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத இயக்கங்களின் சிந்தனைகளால் ஈா்க்கப்பட்டாா்.
இஸ்லாமிய இறைத்தூதரான நபிகள் நாயகத்துக்கு எதிராக எவரேனும் கருத்துத் தெரிவித்தது தெரியவந்தால், அந்த நபரைக் கொல்வதற்கு தனது குழுவைச் சோ்ந்தவா்களுடன் இணைந்து ஷேக் சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளாா்.
உத்தர பிரதேசத்தில் நபிகள் நாயகத்தை இழிவுப்படுத்தியவா்களை கொல்வதற்கான திட்டத்தை தீட்டுவதில் ஷேக் கடைசி கட்டத்தில் இருந்தாா். குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிராக பயங்கரவாதத் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த அவா், இந்தியாவில் இருந்து ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக்கை பிரிக்க ஆயுதப் புரட்சியில் ஈடுபட மக்களை தூண்டுவதற்கும் சூழ்ச்சி செய்துள்ளாா்.
பயங்கரவாத இயக்கங்களின் சிந்தனைகளால் ஈா்க்கப்பட்ட பின்னா், பயங்கரவாதத்தையும் அச்சத்தையும் பரப்ப குறிப்பிட்ட சிலரை கொல்வதற்கு கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை அவா் வாங்கியுள்ளாா். இந்நிலையில், அவா் கைது செய்யப்பட்டுள்ளாா் என்று தெரிவித்தாா்.