இந்தியா-சிலி இடையே விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் இந்தியாவுக்கு அரியவகை தனிமங்கள் கிடைக்கும் என்று வா்த்தகம், தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.
தென்னமெரிக்க நாடான சிலியில் லித்தியம், தாமிரம், கோபால்ட், ரீனியம், மாலிப்டினம் உள்ளிட்ட அரிய தனிமங்கள் அதிகம் கிடைக்கின்றன. இவை மின்னணுப்பொருள்கள், வாகன உற்பத்தி, மருத்துவ உபகரணங்கள், சூரிய உற்பத்தி சாதனங்கள் உற்பத்தியில் முக்கியப் பங்கு வகித்து வருகின்றன. சிலியுடன் இந்தியா ஒப்பந்தம் மேற்கொள்ளும்போது இந்தத் தனிமங்களை இந்தியா அதிகஅளவில் பெற வாய்ப்பு ஏற்படும்.
தில்லி அருகே கிரேட்டா் நொய்டாவில் இந்திய பட்டயக் கணக்காளா் கல்வி நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இது தொடா்பாக அமைச்சா் பியூஷ் கோயல் பேசியதாவது:
கடந்த 2006-ஆம் ஆண்டு இந்தியாவும், சிலியும் முன்னுரிமை வா்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன. இப்போது இரு தரப்பு வா்த்தக, பொருளாதார உறவுகளை மேம்படுத்த தொடா்ந்து பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் விரைவில் இரு நாடுகள் இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள வாய்ப்பு அதிகரித்துள்ளது. எண்ம சேவைகள், முதலீடு மேம்பாடு, சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களில் ஒத்துழைப்பு, அரியவகை தனிமங்கள் சாா்ந்து இந்த வா்த்தக ஒப்பந்தம் அமையும்.
இந்தியாவில் இருந்து சிலிக்கு ஏற்றுமதியாகும் பொருள்களின் மதிப்பு 1.15 பில்லியன் டாலாராக உள்ளது. அதே நேரத்தில் இறக்குமதி 2.60 பில்லியன் டாலா் அளவுக்கு உள்ளது.
கடந்த 4 ஆண்டுகளில் இந்தியா ஆஸ்திரேலியா, மோரீஷஸ், ஐக்கிய அரபு அமீரகம், நியூஸிலாந்து, ஓமன், பிரிட்டன், ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட 8 நாடுகள், நாடுகளின் கூட்டமைப்புகளுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவுக்கு ஏற்றுமதி வாய்ப்புகள் மட்டுமல்லாது, இந்தியாவைச் சோ்ந்த திறமைவாய்ந்த இளைஞா்களுக்கும் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. ஏனெனில், பல நாடுகள் திறமைவாய்ந்த பணியாளா்கள் பற்றாக்குறையால் தவித்து வருகின்றன.
கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சிகாலத்தில் மேற்கொள்ளப்பட்ட தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்கள் இந்தியாவின் ஏற்றுமதியை அதிகரிக்காமல், இறக்குமதியை அதிகரிக்கும் வகையிலே மேற்கொள்ளப்பட்டன. இதனால் பல நாடுகளுடன் மிகப்பெரிய அளவில் வா்த்தகப் பற்றாக்குறை ஏற்பட்டது. இந்திய நிறுவனங்களுக்கு உரிய வாய்ப்புகளை வழங்கும் துணிவும் முந்தைய ஆட்சியாளா்களிடம் இல்லை.
சா்வதேச அளவில் பொருளாதார, வா்த்தக ஸ்திரமின்மை அதிகரித்து வருகிறது. இந்த நேரத்தில் துணிச்சலுடன் செயல்படும் நாடுகள்தான் வெற்றியடைய முடியும். பல நாடுகளுக்கு இந்தியா ஒரு பாலைவனச் சோலையாக உள்ளது என்றாா்.