சுற்றுலா என்பது இந்தியர்களின் இயல்பாக மாறிவிட்டதாக மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் நிர்வாக இயக்குநர் சுமன் பில்லா தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் ‘சுற்றுலா சிறப்பு கருத்தரங்கு 2026’ இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றது.
இந்த கருத்தரங்கை குத்துவிளக்கு ஏற்றி தொடக்கிவைத்த சுமன் பில்லா, ”இந்தியாவின் பன்முகத்தன்மை” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அவர் பேசியதாவது:
”உலகின் ஆன்மீக ஞானத்தின் பாதுகாவலராக இந்தியாவைப் பலரும் பார்க்கின்றனர். மறுபுறம், அதிநவீன தொழில்நுட்பங்களை உருவாக்கும் தகவல் தொழில்நுட்ப வல்லரசாகவும் இந்தியா பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு பரிமாணங்களும் உண்மையானவை.
கரோனா நோய்த்தொற்றின் போது உலகின் பெரும்பகுதியினரைக் காப்பாற்ற தடுப்பூசிகளை உருவாக்கிய நாடும் இந்தியாதான். நம்மிடம் பாரம்பரியமும் ஒருங்கிணைந்தே வாழ்கின்றன. அனைத்து துறைகளிலும் நமது திறமையை வெளிப்படுத்துகிறோம்.
சுற்றுலா என்பது இந்தியர்களின் இயல்பாக மாறிவிட்டது என்று நான் நினைக்கிறேன். அதன் வளர்ச்சி ஆச்சரியமூட்டுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் நமது உள்கட்டமைப்பு முன்னேறியுள்ளது. 2014-ல் 75 ஆக இருந்த விமான நிலையங்கள் தற்போது 150 ஆக உள்ளன. இன்னும், 20 -30 விமான நிலையங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இது ஆச்சரியமூட்டுகிறது. நமது விமானப் போக்குவரத்துத் திறன் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.
இந்தியாவில் 800 முதல் 850 விமானங்கள் இருந்த நிலையில், தற்போது 1500 புதிய விமானங்கள் வாங்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளன. போயிங் மற்றும் மற்ற நிறுவனங்கள் திட்டமிட்டபடி செயல்பட்டால், 2030-க்கும் இந்த விமானங்கள் கிடைத்துவிடும். இதன்மூலம், நமது விமானப் பயணிகளின் எண்ணிக்கை 200 சதவீதம் அதிகரிக்கப் போகிறது.
நாடு முழுவதும் உலகத் தரம் வாய்ந்த சாலைகள் நம்மிடம் உள்ளன. ரயில்வேதுறையும் மேம்பட்டுள்ளது. வந்தே பாரத் ரயில்கள் சுற்றுலாத் துறைக்கு ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்துபவையாகும். மக்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பயணிக்க இவை ஒரு வேகமான, வசதியான, எளிதான வழியாகும். இந்தியாவிடம் தேவையான அனைத்து அடிப்படைக் கூறுகளும் இருப்பதாக நான் நினைக்கிறேன்” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.