மத்திய பிரதேசம் சுற்றுலாவுக்கு முன்னோடி மாநிலமாக உருவெடுத்துள்ளதாக அம்மாநில சுற்றுலாத் துறை செயலாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் நடத்தும் ‘சுற்றுலா சிறப்பு கருத்தரங்கு 2026’ இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றது.
இந்த கருத்தரங்கில் கலந்துகொண்ட ம.பி. சுற்றுலாத் துறை செயலாளர் இளையராஜா, ”இந்தியாவின் இதயம்: பிரம்மாண்டமான மத்தியப் பிரதேசம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அவர் பேசியதாவது:
”மத்திய பிரதேசத்தில் ஓர்ச்சா என்ற நகரம் மிகவும் அழகானது. இது ஒரு பழமையான நகரம். பெட்வா நதி அருகில் பாய்கிறது. மாண்டு ஒரு மாயாஜாலமான இடம், மழைக்காலத்தில் மிகவும் அழகாக இருக்கும். குவாலியர் ஒரு சக்தி வாய்ந்த நகரம். இசை நகரமும்கூட.
ம.பி.யில் 9 புலிகள் காப்பகங்கள் உள்ளன. 11 தேசிய பூங்காக்களும், 24 வன விலங்கு சரணாலயங்களும் உள்ளன. ம.பி.தான் நாட்டின் புலிகள் மாநிலம். 800-க்கும் மேற்பட்ட புலிகள் உள்ளன. தற்போது கணக்கெடுப்பு நடந்து கொண்டிருக்கிறது, 1,000 புலிகள் என்ற எண்ணிக்கையைக் கடப்போம். சிறுத்தைகளின் மாநிலமாகவும் திகழ்கிறோம்.
கடந்த எழுபது ஆண்டுகளாக சிவிங்கிப்புலிகள் அழிந்துவிட்ட நிலையில், பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ், ம.பி. காட்டுக்குள் சிவிங்கிப்புலிகள் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவை நன்றாக செழித்து வளர்கின்றன.
முதலைகள், கழுகுகள், ஓநாய்கள் என எந்த விலங்குகளின் பெயர்களைக் கூறினாலும், அது மத்திய பிரதேசத்தில் உள்ளது. இது வன ராஜ்யம்.
மத்திய பிரதேசத்தில் நிறைய புதிய சுற்றுலாத் தலங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. ஏனெனில், பழைய சுற்றுலாத் தலங்களில் அதிகளவில் கூட்டம் அலைமோதுகிறது. சொகுசுப் படகு சுற்றுலாவை உருவாக்க தீவிர பரிசீலனையில் உள்ளோம். ஏனெனில், நர்மதா நதி ம.பி.யைக் கடந்து மகாராஷ்டிரத்திலும் பாய்ந்து குஜராத் செல்கிறது.
ஓரிரு ஆண்டுகளில் ஓம்காரேஷ்வரில் உள்ள ஒற்றுமைச் சிலையிலிருந்து, குஜராத்தில் உள்ள ஒற்றுமைச் சிலை வரை ஒரு சொகுசுப் படகு இயக்கப்படும்.
யுனெஸ்கோவின் பாரம்பரிய தளங்கள் பட்டியலில் பல இடங்களை நாங்கள் சேர்த்து வருகிறோம். 2028-ல் ஓர்ச்சாவும் இடம்பெறும் என்று நம்புகிறோம்.
பன்னா புலிகள் காப்பகத்திற்கு அருகில் உள்ள மாண்ட்லா, சிறந்த சுற்றுலா கிராமமாகவும் உள்ளது. மேலும், சாந்தேரி, பிராந்தூரில் நாங்கள் ஒரு அழகான கைத்தறி கைவினை கிராமத்தை உருவாக்கியுள்ளோம், அது சிறந்த கைத்தறி கைவினை கிராமமாக விருது பெற்றுள்ளது. மகேஸ்வரி, மகேஷ்வர் மற்றும் குக்ஷி ஆகிய இடங்களில் மேலும் இரண்டு கைவினை கிராமங்களை நாங்கள் உருவாக்க உள்ளோம்.
இந்த அனைத்து இடங்களுக்கும் செல்ல இணையதளத்தில் அனுமதி பெறலாம். தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருகின்றது.
கடந்தாண்டு 13.3 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர். ஆனால், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை கவருவதில் பின்தங்கியுள்ளோம் என்பதை நேர்மையாக ஒப்புக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.