மருத்துவம் மற்றும் படப்பிடிப்புச் சுற்றுலாவே எங்களின் தொலைநோக்குப் பார்வை என்று தெலங்கானா சுற்றுலாத் திட்டக் கண்காணிப்பு பிரிவைச் சேர்ந்த தில்லேஷ்வரி அயனா தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் நடத்தும் ‘சுற்றுலா சிறப்பு கருத்தரங்கு 2026’ இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றது.
இந்த கருத்தரங்கில் கலந்துகொண்ட தெலங்கானா சுற்றுலாத் துறை அதிகாரி தில்லேஷ்வரி அயனா பேசியதாவது:
”தெலங்கானா இந்தியாவின் தென்பகுதிக்கு ஒரு முக்கிய நுழைவாயிலாக மாறி வருகிறது. தென்னிந்தியாவின் இதயமான ஹைதராபாத் கலாச்சாரம் மற்றும் செல்வத்தின் உலகளாவிய மையமாக மாறியுள்ளது. இந்த பாரம்பரியத்தின் அடையாளமாக கம்பீரமான கோல்கொண்டா கோட்டையும், புகழ்பெற்ற சார்மினாரும் இன்றும் திகழ்கின்றன. தெலுங்கானாவில் அழகான நினைவுச்சின்னங்கள் உள்ளன.
மருத்துவச் சுற்றுலா, படப்பிடிப்புச் சுற்றுலா மற்றும் தனி நபர்களுக்கேற்ற சுற்றுலா ஆகியவை எங்கள் நவீன தொலைநோக்குப் பார்வைகளாகும். பாகுபலி போன்ற பெரும்பாலான பெரிய திரைப்படங்களின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் எடுக்கப்பட்டுள்ளன. படப்பிடிப்புச் சுற்றுலாவுக்கும் நாங்கள் மிகவும் பிரபலமானவர்கள்.
மருத்துவச் சுற்றுலாவுக்கான உலகளாவிய மையமாக எங்களை நிலைநிறுத்தவும் தெலுங்கானா முயன்று வருகிறது. தற்போதைய காலகட்டத்தில் மருத்துவச் சுற்றுலா ஒரு பரபரப்பான விஷயமாக மாறி வருகிறது. ஆனால் நீங்கள் ஹைதராபாத்தில், ஒரு சிறந்த மருத்துவச் சுற்றுலா அனுபவத்தைப் பெறுவீர்கள். எங்களிடம் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் பல மருத்துவமனைகள் உள்ளன. நீங்கள் காத்திருக்க வேண்டியிருக்காது. உயர்தரமான, மலிவான கட்டணத்தில் மாற்று மருத்துவ வசதிகள் ஹைதராபாத்தில் வழங்கப்படுகிறது.
எங்களிடம் உலகின் சிறந்த ஸ்டுடியோக்கள் உள்ளன. சர்வதேச திரைப்படக் குழுக்களை வரவேற்க நாங்கள் தயாராக இருக்கிறோம். தெலுங்கானா உள்நாட்டு மற்றும் சர்வதேசப் பயணிகளுக்கு ஒரு முழுமையான இடமாகத் திகழ்கிறது” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.