மேற்கு வங்கத்துக்கு மத்திய அரசு அனுப்பும் பணம் மக்களைச் சென்றடையவில்லை என்று திரிணமூல் காங்கிரஸ் அரசு மீது மத்திய அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் பர்கனாஸ் வடக்கு 24 பகுதியில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் அமித் ஷா பேசுகையில், “ஊழலை ஒரு நிறுவனமாகவே மமதா பானர்ஜி மாற்றியுள்ளார். ஆசிரியர் ஆள்சேர்ப்பு ஊழல், அரசுப் பணியாளர் தேர்வாணைய ஊழல், மாநகராட்சி ஆள்சேர்ப்பு ஊழல், பசு கடத்தல் ஊழல், ரேஷன் ஊழல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்ட ஊழல், பிரதமரின் வீட்டு வசதி திட்ட ஊழல் குறித்து மமதா பானர்ஜியிடம் கேட்க விரும்புகிறேன்.
மாநிலத்தில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. அவரின் மருமகனை முதல்வராக்கவே அவர் முயல்கிறார். அவரது கண்கள் கண்புரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதால், அவரால் ஊழலைக் காண முடியவில்லை. மக்கள்தான், அவரின் கண்களுக்கு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும்.
பார்த் சாட்டர்ஜி, ஜோதி பிரியா மாலிக், அனுப்ரதா மொண்டால், ஜீவன் கிருஷ்ண சாஹா, மாணிக் பட்டாச்சாரியா, மதன் மித்ரா, சந்திரநாத் சின்ஹா, பரேஷ் பால், குந்தல் கோஷ், அரபுல் இஸ்லாம், ஃபிராத் ஹக்கிம், சோவன் சாட்டர்ஜி, குனால் கோஷ் ஆகியோர் சிறை சென்றவர்கள். நான் சவால் விடுகிறேன் - ஊழலை எதிர்க்கும் தைரியம் மமதா பானர்ஜிக்கு இருந்தால், இவர்களுக்கு சீட் கொடுக்க கூடாது. ஒருவேளை, அவர்களுக்கு சீட் கொடுக்கவில்லை என்றால், மமதாவின் மருமகன் பெயரை அவர்கள் வெளியில் சொல்லி விடுவார்கள்.
இங்கு பாஜக ஆட்சியமைத்த பிறகு, அனைத்து ஊழல் குற்றச்சாட்டுகளையும் உச்ச நீதிமன்ற நீதிபதியின் மேற்பார்வையின்கீழ் விசாரித்து, ஊழல் செய்த அனைவரையும் சிறையில் அடைப்போம் என்று நான் உறுதியளிக்கிறேன்.
மேற்கு வங்கத்தை மேம்படுத்துவதில் பிரதமர் மோடி குறை வைத்ததே இல்லை. மாநிலத்துக்காக ரூ. 10 லட்சம் கோடி ஒதுக்கீடு, 12 புதிய ரயில்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
ஆனால், உங்கள் கிராமத்துக்கு மத்திய அரசின் பணம் ஏதேனும் வந்திருக்கிறதா? பிரதமர் மோடி அனுப்பும் பணம் எங்கே செல்கிறது? இவை அனைத்தும் திரிணமூல் காங்கிரஸிடம்தான் செல்கிறது.
நீங்கள் பாஜக அரசைத் தேர்ந்தெடுத்தால்தான், ஒவ்வொரு ரூபாயும் கிராமங்களுக்கும் ஏழைகளுக்கும் சென்றடையும்” என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.