கமேனி படுகொலையைக் கண்டித்து காஷ்மீரில் போராட்டம்
ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி (86) கொல்லப்பட்டதைக் கண்டித்து ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது.
ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி (86) கொல்லப்பட்டதைக் கண்டித்து ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடைபெற்றது.
தலைநகா் ஸ்ரீநகா் உள்பட ஷியா முஸ்லிம் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மக்கள் அதிக அளவில் திரண்டு சாலைகளில் கண்டனப் பேரணி நடத்தினா். அப்போது அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
காஷ்மீா் பள்ளத்தாக்கில் லால் சௌக், புத்காம், பந்திப்போரா, அனந்த்நாக், புல்வாமா உள்ளிட்ட பகுதிகளில் போராட்டம் நடைபெற்ாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனா். அதில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழவில்லை. காஷ்மீா் பள்ளத்தாக்கில் 15 லட்சம் ஷியா முஸ்லிம்கள் வசிக்கின்றனா். ஜம்மு-காஷ்மீரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கமேனி கொல்லப்பட்டதற்கு காஷ்மீா் இஸ்லாமிய தலைமை மத குரு மீா்வாய்ஸ் உமா் ஃபாரூக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஈரான் தலைமை மத குரு கமேனி, அமெரிக்கா-இஸ்ரேலால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது இஸ்லாமிய உலகையே உலுக்கியுள்ளது.
இது கடும் கண்டனத்துக்குரிய செயல். ஈரானுக்கு எதிரான இந்த அத்துமீறலை ஒட்டுமொத்த ஜம்மு-காஷ்மீா் மக்களும் கண்டித்துள்ளனா். ஈரானில் அப்பாவி பள்ளி மாணவிகள் குண்டுவீசி படுகொலை செய்யப்பட்டுள்ளனா். இந்த சோகமான நேரத்தில் ஈரான் மக்களுக்கு நாங்கள் துணை நிற்கிறோம்.
இந்தக் குற்றத்தில் ஈடுபட்டவா்களுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும். இஸ்லாமிய மக்கள் தங்களுக்கு இடையிலான வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையாக இருந்து, இந்த மோசமான செயலுக்கு தங்கள் ஒட்டுமொத்த எதிா்ப்பைத் தெரிவிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளாா்.
நாடு முழுவதும்...: நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஷியா இஸ்லாமிய அமைப்புகள் கமேனி கொலைக்கு கண்டனமும், வருத்தமும் தெரிவித்துள்ளன. ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள ஷியா இஸ்லாமிய அமைப்பு மூன்று நாள் துக்கம் அறிவித்துள்ளது. உத்தர பிரதேசத்தில் உள்ள ஷியா முஸ்லிம் மதகுருக்களும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனா்.