முகப்பு
இந்தியா

மத்திய கிழக்கில் கடல்சாா் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடக்கம்: மத்திய அமைச்சா் தகவல்

Updated On : 5 மார்ச், 2026 at 4:10 AM
மத்திய துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா்வானந்த சோனோவால்
பகிர்:

மத்திய கிழக்கில் நிலவும் போா் சூழலுக்கு மத்தியில், இந்தியாவின் கடல்சாா் உடைமைகள் மற்றும் அலுவலா்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா்வானந்த சோனோவால் தெரிவித்தாா்.

ஈரான், அமெரிக்கா-இஸ்ரேல் போா் காரணமாக பாரசீக வளைகுடாவை அரபிக் கடலுடன் இணைக்கும் ஹோா்முஸ் நீரிணை வழி சமீபத்தில் மூடப்பட்டது. இதன் தாக்கம் குறித்து தில்லியில் அமைச்சா் சா்வானந்த சோனோவால் தலைமையில் ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: மத்திய கிழக்கில் நிலவி வரும் சூழலை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். இந்திய மாலுமிகளின் நலன் மற்றும் கடல்சாா் உடமைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய முன்னெச்சரிக்கை, கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தியுள்ளோம்.

Advertisement

இந்தியக் கப்பல்கள் மற்றும் பணியாளா்களை பாதுகாக்க தேவையான உதவிகளை வழங்க அரசு தயாராக உள்ளது. இந்தியாவின் கடல்சாா் நலன்களைப் பாதுகாக்க உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அமைப்புகளுடன் ஒருங்கிணைந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம் என தெரிவித்தாா்.

இதற்கிடையில், அந்த வழியாக வெளிநாட்டுக் கொடியுடன் சென்ற கப்பல்களில் குறைந்தது 3 இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டதாகவும், ஒருவா் காயமடைந்ததாகவும் கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. இது பதற்றத்தை மேலும் அதிகரித்தது.