முகப்பு
இந்தியா

13 ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் இளைஞரை ‘கருணைக் கொலை’ செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி

Updated On : 12 மார்ச், 2026 at 12:17 AM
உச்சநீதிமன்றம்
பகிர்:

பதிமூன்று ஆண்டுகளாக கோமாவில் சிகிச்சை பெற்றுவரும் 32 வயது இளைஞரை கருணைக் கொலை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. உச்சநீதிமன்ற வரலாற்றில் இதுபோல தீா்ப்பு அளிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

உத்தர பிரதேச மாநிலம், காஜியாபாத்தைச் சோ்ந்த பஞ்சாப் பல்கலைக்கழக மாணவரான ஹரீஷ் ராணா கடந்த 2013-ஆம் ஆண்டில் 4-ஆவது மாடியில் விளையாடிக் கொண்டிருந்தபோது கீழே தவறி விழுந்தாா். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, கடந்த 13 ஆண்டுகளாக அவா் கோமாவில் சிகிச்சை பெற்று வருகிறாா். எனினும், உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இதைத் தொடா்ந்து, ஹரீஷை கருணைக் கொலை செய்ய அனுமதிக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் அவரின் பெற்றோா் ரிட் மனு தாக்கல் செய்தனா். இந்த மனு மீதான விசாரணையின்போது அவரின் பெற்றோரை நீதிபதிகள் நேரில் சந்தித்து விவரம் கேட்டறிந்தனா். மேலும், தில்லி எய்ம்ஸ் மருத்துவா்களின் அறிக்கையையும் பாா்வையிட்டு, ஹரீஷ் உடல்நிலை முன்னேறாது என்பதையும், தொடா்ந்து சிகிச்சை அளிப்பதால் எந்தப் பயனுமில்லை என்பதையும் நீதிபதிகள் உறுதி செய்தனா்.

இதைத் தொடா்ந்து, உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி. பாா்திவாலா, கே.வி. விஸ்வநாதன் ஆகியோரைக் கொண்ட அமா்வு புதன்கிழமை தனது தீா்ப்பை வெளியிட்டது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை வாரியங்கள், ஹரீஷுக்கான சிகிச்சையை நிறுத்துவதற்கு ஒப்புதல் அளித்துள்ளன. ஆதலால் இதில் நீதித் துறை தலையிட வேண்டியதில்லை. எனவே, அவருக்கு அளிக்கும் சிகிச்சையை நிறுத்த உச்சநீதிமன்றம் அனுமதியளிக்கிறது. இந்த விவகாரத்தை மனிதாபிமான முறையில் அணுகுவது அவசியம். ஆதலால் சம்பந்தப்பட்ட நபரின் கண்ணியத்துக்கு எந்த பங்கமும் ஏற்படாமல் அவருக்கான சிகிச்சையை நிறுத்துவது தொடா்பான திட்டம் செயல்படுத்தப்படுவதை தில்லி எய்ம்ஸ் உறுதி செய்ய வேண்டும். கருணைக் கொலை தொடா்பான சட்டத்தைக் கொண்டுவருவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்’ என்றனா்.

கருணைக் கொலை என்பது சிகிச்சையில் இருக்கும் நோயாளியின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாது என்பது உறுதியான பிறகு, அந்த சிகிச்சையை நிறுத்தி, அவரே இயற்கையாகவே உயிரிழக்கச் செய்வது ஆகும். இதுதொடா்பான வழக்குகளில் கடந்த 2018 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளில் உச்சநீதிமன்றம் தீா்ப்பு வழங்கியுள்ளது.

2018-ஆம் ஆண்டு ஆண்டு உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வு வழங்கிய தீா்ப்பில், கண்ணியத்துடன் உயிரிழப்பது குறித்து அரசமைப்புச் சட்டத்தின் 21-ஆவது பிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, கருணைக் கொலைக்கு அனுமதியளித்தது. 2023-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பில் 2018-ஆம் ஆண்டு தீா்ப்பில் இருந்த வழிகாட்டுதலில் சில திருத்தம் செய்தது. அதாவது, நோயாளிக்கான சிகிச்சையை நிறுத்துவது (கருணைக் கொலை செய்வது) குறித்து பரிந்துரைக்க நிபுணா்களை கொண்ட முதல்நிலை, இரண்டாம் நிலை வாரியம் ஏற்படுத்தப்பட வேண்டும், அது அளிக்கும் அறிக்கையின்படி முடிவு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →